அரசு பள்ளி ஆசிரியை மீது மோசடி வழக்கு
அரசு பள்ளி ஆசிரியை மீது மோசடி வழக்கு
ராணுவ வீரர் மீதும் வழக்கு
திருவண்ணாமலை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடியை மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது கணவரான ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தாலுகா சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அண்டம்பள்ளம், பவித்திரம், வலசை, இசுக்கழி காட்டேரி போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் மனு ஒன்று அளித்திருந்தனர்.
அதில் அவர்கள் கூறியிருந்ததாவது,
சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உண்ணாமலை (வயது 38) என்பவர் இசுக்கழி காட்டேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது கணவர் செல்வம் ராணுவத்தில் வேலை செய்கிறார். உண்ணாமலை 20க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த பலரை வாடிக்கையாளர் சேர்த்து ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான ஏல சீட்டுகளை நடத்தி வந்தார். இதில் 200க்கும் அதிகமானவர்கள் சேர்ந்தனர். இவர்களிடமிருந்து மாதம் தோறும் ரூ.1000, ரூ. 1200 ரூபாய் என பணம் வசூலிக்கப்பட்டது.
மேலும் உண்ணாமலையும், அவரது கணவரும் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து இரட்டிப்பு செய்து தருவதாகவும் கூறி பணம் வசூலித்தனர். ஏல சீட்டுகளில் பணம் செலுத்தியவர்களுக்கு சீட்டு முதிர்வடைந்தும் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து வந்தனர். அதே போல் தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கும் பொருட்கள் வழங்கவில்லை. இதனால் உண்ணாமலையிடமும், அவரது கணவரிடமும் சென்று எங்கள் பணத்தை திருப்பி கேட்டோம். அவர்கள் உரிய பதில் கூறாமல் காலம் கடத்தி வந்தனர்
இந்நிலையில் திடீரென அவர்கள் தலைமறைவாகி விட்டனர். ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டுகளை நடத்தியதன் மூலம் பல பேரிடமிருந்து 1 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அரசு பள்ளி ஆசிரியை உண்ணாமலை, அவரது கணவர் செல்வம் ஆகியோர் மீது மோசடி (420) வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து உண்ணாமலையை இன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
No comments