விபத்தில் இறந்தவரின் உடலுக்கு அரசு மரியாதை
கலெக்டர் நேரில் சென்று மாலை அணிவித்தார்
திருவண்ணாமலை அருகே விபத்தில் இறந்தவரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்தார்.
உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச்சாவு நிலையை அடைந்த துயர சூழ்நிலையிலும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், அவர்களது உடலுக்கு இறுதி சடங்குகள் அரசு மரியாதைகளுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 23ந் தேதி மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மாதுலம்பாடி கணேசபுரத்தை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ஹரிஹரன் கடந்த 31.03.2024 அன்று விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் சம்மதத்தின் பேரில் ஹரிகரனின் உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (01.04.2024) மாதுலம்பாடிக்கு சென்று ஹரிஹரனின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதே போல் கடந்த பிப்ரவரி மாதம் கீழ்பென்னாத்தூர் வட்டம் கீக்களுர் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணையன் என்பவரது உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தாரின் ஒப்புதலோடு தானம் பெறப்பட்டது. அவரது உடலுக்கும் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
Social Plugin