தூக்கில் தொங்கிய ஸ்ரீராம் சிட்ஸ் மேனேஜர் உடல்
திருவண்ணாமலையில் பரபரப்பு
திருவண்ணாமலையில் ஸ்ரீராம் சிட்ஸ் மேனேஜர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 6வது தெருவைச் சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் சிவராமன்(வயது 34). மனைவி பெயர் சந்திரிகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சிவராமன் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் உதவி மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் இருந்த சிவராமன், தனது அறையில் இருந்த பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்தும் அக்கம்-பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருவண்ணாமலை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவராமனுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் கடன் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும்.
சிவராமன் எதற்காக கடன் வாங்கினார், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்திற்கு ஏதாவது பணம் தர வேண்டியது உள்ளதா? என்பது குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Social Plugin