2 பக்தர்கள் இறப்பு-இருதய டாக்டருடன் சிகிச்சை பிரிவு
2 பக்தர்கள் இறப்பு-இருதய டாக்டருடன் சிகிச்சை பிரிவு
அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமியன்று 2 நாட்கள் 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு
நெஞ்சு வலி வந்து 2 பக்தர்கள் இறந்ததை அடுத்து வருகிற சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2 நாட்கள் இருதய டாக்டருடன் கூடிய மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
பஞ்சபூதங்களில் நடு நாயகமாக அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையே சிவலிங்க வடிவமாக (சுயம்பு வடிவமாக) காட்சியளித்துக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து கிரிவலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சித்திரை மாதத்தில் வருகிற பவுர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்திருப்பதால் அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
கிரிவலம் வர உகந்த நேரம்
சித்ரா பவுர்ணமி வருகிற 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4-16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5-47 மணிக்கு நிறைவடைகிறது எனவே 23ஆம் தேதி கிரிவலம் வர உகந்த நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு:-
சித்ரா பவுர்ணமியான 23ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இரவு 8 மணி வரை நடைதிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு கட்டணம் இல்லாத தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ராஜகோபத்திலிருந்து வடக்கு ஐந்தாம் பிரகாரத்தில் அனுமதிக்கப்பட்டு வடக்கு அம்மணி அம்மன் கட்டை கோபுரம் வழியாக கிளி கோபுரம் உள்ளே உள்ள துலாபாரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கியூ லைன் வழியாக சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மாற்றுத்திறனாளிகள் பேட்டரி கார் மூலம் மேற்கு கோபுரம் கடை கோபுரம் வைகுந்த வாயில் வழியாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவிஐபி கடிதம் ஏற்கப்படாது
முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அனைத்து கோபுர வாயில்களில் இருந்து நடைபாதைகளில் நிழல் பந்தல்கள், மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் தேங்காய் நார் தரை விரிப்புகளும் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேல் கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூ லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆறாம் பிரகாரத்தில் திருமதில் வெளிப்புறம் தற்காலிக நிழல் பந்தல்கள் தேங்காய் நார் தரைவிரிப்பு குடிநீர் மற்றும் மோர் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெயிலை முன்னிட்டு பக்தர்களுக்கு வெப்ப பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான இடங்களில் வெள்ளை கூல் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமின்றி ஐந்தாம் பிரகாரத்தில் 10 சின்டெக்ஸ் டேங்குகள் மூலம் கூடுதலாக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி தன்னார்வ சேவை பணியாளர்கள் மூலம் வரிசையில் பக்தர்கள் செல்லும் போதே குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
108 ஆம்புலன்ஸ் வசதி
கோயிலின் கிளி கோபுரத்தின் உள்ளே சம்பந்த விநாயகர் சன்னதிக்கு எதிரில் உள்ள தச்சொளி மண்டபத்தில் மருத்துவத்துறையின் மூலம் இருதய சிகிச்சை நிபுணர் உடன் கூடிய அவசர கால மருத்துவ சிகிச்சை பிரிவு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 24 மணி நேரம் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும, பக்தர்களை அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக 108 ஆம்புலன்ஸ் வசதி, வட ஒத்தவாடை தெரு அருகிலும் பேகோபுரம் அருகிலும் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும், மொபைல் ஆம்புலன்ஸ் தேவையான அளவில் கோயில் உள்ளேயும், வெளியேயும், கிரிவலப் பாதையிலும் இருந்திட வேண்டும். கோயிலிலும் கிரிவலப்பாதையிலும் 24 மணி நேரமும் தடை இன்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் கோயில் நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோயிலுக்கு வெளியே வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவரும், கோயிலுக்குள் பக்தர் ஒருவரும் நெஞ்சு வலி இறந்தனர். கோயிலுக்குள் மயங்கி விழுந்த பக்தருக்கு சாமி தரிசனம் செய்ய வந்த டாக்டர் ஒருவர் முதலுதவி செய்ததும், பிறகு அந்த நெஞ்சு வலி வ்நத பக்தர் பேட்டரி காரில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதை அடுத்து கோயில் நிர்வாகம் மீது பலர் கண்டனத்தை பதிவிட்டிருந்தனர்.
(இது குறித்த செய்தி- https://www.agnimurasu.com/2024/03/the-devotee-who-was-standing-in-the-sun-got-chest-pain-and-died)
இதையடுத்து கோயிலுக்குள் இருதய சிகிச்சை நிபுணருடன் கூடிய மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட கோயில் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. எனவே சித்ரா பவுர்ணமி அன்று இருதய டாகடருடன் கூடிய மருத்துவ சிகிச்சை பிரிவு இயங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
No comments