F

மாநகராட்சியோடு இணைப்பதா?-கிராம மக்கள் போராட்டம்

மாநகராட்சியோடு இணைப்பதா?-கிராம மக்கள் போராட்டம் 

தேர்தல் நேரத்தில் போராட்டம்--ஆளும்கட்சி தரப்பு அதிர்ச்சி 

திருவண்ணாமலை மாநகராட்சியோடு துர்க்கை நம்மியந்தல் ஊராட்சியை இணைக்கும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

மாநகராட்சியோடு இணைப்பதா?-கிராம மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியை தரம் உயர்த்தி சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில் வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், சே.கீழ்நாச்சிபட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேலத்திகான், சாவல்பூண்டி, நல்லவன் பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை,  தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்பியந்தல், மலப்பாம்பாடி ஆகிய 18 ஊராட்சிகளும் இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு நகர பகுதி மக்கள் வரவேற்பு அளித்தாலும், கிராமங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், வரிகள் உயரும், கிராமத்தில் இருந்த ஊராட்சி அலுவலகத்தை அடிப்படை தேவைகளுக்கு நாடமுடியாமல், திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தை தேடி செல்ல வேண்டும் ஆகிய காரணங்களுக்காக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 

கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தாமல் எப்படி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம் என ஊராட்சி மன்றத் தலைவரை கிராம மக்கள் கேள்விக் கணைகளால் துளைத்து வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தலைவராக உள்ள ஊராட்சியில் மாநகராட்சியில் இணைய இசைவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் திமுகவைச் சேர்ந்தவர் தலைவராக இருக்கும் உடையானந்தல் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சியோடு இணைப்பதா?-கிராம மக்கள் போராட்டம்

மாநகராட்சியோடு இணைப்பதா?-கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில் மாநகராட்சியோடு இணைய உள்ள 18 ஊராட்சிகளில் ஒன்றான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள துர்க்கை நம்மியந்தல் மக்கள் இன்று காலை மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை-போளூர் ரோட்டில் சாலை மறியல் செய்ய திரண்டனர். திமுகவைச் சேர்ந்தவர் இந்த ஊராட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 

பொதுமக்களின் போராட்டத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கைகளை மனுக்களாக தந்தால், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மனுக்கள் தர ஏற்பாடு செய்தனர்.

இதனால் சாலை மறியல் போராட்டம் செய்ய வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் கிராம மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியது ஆளும்கட்சி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

--------------------------------------------


Next Post Previous Post

No comments