வேட்பாளர்கள் வேட்பு மனுவை ஆன்லைனில் பதிவு செய்யலாம்
திருவண்ணாமலை, ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் சந்தேகத்திற்கிடமாக ரூ.1லட்சம் மேல் பரிவர்த்தனை செய்தால் கலெக்டரிடமும், ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறையிடமும் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை 20.03.2024 முதல் 27.03.2024 வரை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்களை ஆன்லைனில் (Online) பதிவு செய்திடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணையதளம் http://suvidha.eci.gov.in ஆகும். ஆனால் வேட்பு மனுவிற்கான கடைசி நாளுக்கு முந்தைய நாள் வரை மட்டுமே நிகழ்நிலையில் (ஆன்லைனில்) பதிவு செய்ய முடியும். நிகழ்நிலையில் சான்றுதியாவணம் (Affidavit) பதிவேற்றம் செய்யும் வசதியும், நிகழ்நிலையில் வைப்புத் தொகை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்நிலை வேட்புமனுவினை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு உரிய ஆவணங்களுடன் நேரில் வேட்பாளரோ, வேட்புமனுவினை முன்மொழிபவரோ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். அம்மனுவில் வேட்புமனு தாக்கல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே வேட்பு மனுவினை சமாப்பிக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே ஆகும். காலை 11மணிக்கு முன்னரும் மாலை 3 மணிக்கு பின்னரும் வரப்பெறும் வேட்புமனுக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடமும், நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர், திருவண்ணாமலை அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
ஆர்டிஓ அலுவகத்திலும் வேட்புமனுவை அளிக்கலாம்
ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலரிடமும், நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர், ஆரணி வருவாய் கோட்ட அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளித்திடலாம்.
மேலும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்திடும்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தியவாறு கீழ்க்கண்ட நடைமுறைகளை கணடிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறை:-
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் முந்தைய நாளிலிருந்து மட்டுமே தேர்தல் செலவினத்திற்காக புதியதாக வங்கிக் கணக்கினை தொடங்க வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் புதியதாக வங்கிக் கணக்கு தொடங்கலாம்.
வங்கிக் கணக்கு வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவரது தேர்தல் முகவர் ஆகியோர் கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்கலாம். வேட்பாளர் அவரது குடும்ப உறுப்பினர்களை கூட்டாக கொண்டு வங்கிக் கணக்கு தொடங்கக் கூடாது. மேற்படி,வங்கிக் கணக்கு விவரத்தினை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தரவேண்டும்.
வேட்பு மனுவுடன் வேட்பாளர் சம்மந்தப்பட்ட Form 26 Affidavit ஒன்றினை நோட்டரி பப்ளிக் சான்றுடன் தாக்கல் செய்ய வேண்டும்
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பாதுகாப்பு வைப்புத் தொகை (Security Deposit) ரூ.25000 ரொக்கமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்த வேண்டும். நிகழ்நிலையில் வேட்பு மனு அளித்தால் நிகழ்நிலையிலேயே வைப்புத் தொகையினை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. காசோலை, வரைவோலை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினருக்கான வேட்பு மனு தாக்கல் பாதுகாப்பு வைப்பு தொகை ரூ.12500 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் எனில் அசல் சாதிச் சான்றினை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன 4 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வரவேண்டும்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரச்சார வாகனத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே அனுமதி பெறவேண்டும்
மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் பண பரிவர்த்தனை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலின்போது சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை (Suspicious Money Transaction) குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் இதர வங்கி மேலாளர்களுடன் விளக்கக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடத்தப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகளை அனைத்து வங்கி அலுவலர்களும் கண்காணித்து தினந்தோறும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குள் இயங்கி வரும் அனைத்து வங்கிகளிலும் ரூ.1லட்சத்திற்கு மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் ஏதேனுமிருப்பின் அது குறித்து நாள்தோறும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மூலமாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வருமான வரித்துறையினருக்கு அறிக்கை அனுப்பிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்தி விழிப்புணர்வு
100 சதவீத வாக்குப் பதிவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏறபடுத்தும் விதமாக மக்கள் அதிகமான கூடும் இடங்களில் செல்பி பாய்ண்ட் அமைத்திடவும், யூ டியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றிலும் குறும்படம், புகைப்படங்கள், காணொளி படைப்புகளை பரப்புரை செய்திடவும், மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள நிகழ்ச்சிகளை நடத்துவது, மாதிரி வாக்குச் சாவடிகளை ஏற்படுத்துவது என கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம், 'நாட்டிற்கான எனது முதல் வாக்கு' என்ற தேர்தல் வாசகத்தினை பிரபலப்படுத்திடவும், வந்தவாசி பாய், ஜடேரி நாமக்கட்டி, ஆரணி பட்டு சேலை, ஜமுனாமரத்தூர் சிறு தானிய பயிர்வகைகளுடன் இத்தொழில் சார்ந்த நபர்களைக் கொண்டு சிறுதானியங்கள் இவைகளை கொண்டு பல்வேறு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும், மஞ்சப் பைகளில் தேர்தல் Logo/Tagline அச்சிட்டு பதித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கிடவும் தெருக்கூத்து கலைஞர்கள் (புரிசை கிராமம், அனக்காவூர்), நாட்டுப்புற கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், வில்லுப்பாட்டு, கரகாட்டம் மூலமாக பல்வேறு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மகிழ்ச்சி வீதி (Happy Street) என்கிற நிகழ்ச்சியில் பல்வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மராத்தான் போட்டி நடத்த வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2 நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை 20.03.2024 முதல் 27.03.2024 வரை தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வரும் 23.03.2024 அன்று 4-வது சனிக்கிழமை வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதாலும், 24.03.2024 அன்று ஞாயிறு கிழமை விடுமுறை நாள் என்பதாலும், மேற்கண்ட இரண்டு நாட்களிலும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் ஏதும் பெறப்படமாட்டாது
இத்தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------
No comments