மனநலம் பாதிப்பு-வாலிபர் விமானம் மூலம் அனுப்பி வைப்பு

மனநலம் பாதிப்பு-வாலிபர் விமானம் மூலம் அனுப்பி வைப்பு

அண்ணாமலையாரை தரிசிக்க வந்தவர் - 1 வருட சிகிச்சைக்கு பிறகு முன்னேற்றம்

கலெக்டர் ஏற்பாட்டால் சொந்த நாடான இலங்கைக்கு சென்றார் 

மனநலம் பாதிப்பால் சொந்த நாடு செல்ல இயலாமல் தத்தளித்தவர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஏற்பாட்டின் படி விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இயங்கி வரும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில்(ECRC) இலங்கையை சேர்ந்த ஜசந்தன் (வயது-29) என்பவர் கடந்த 1 வருட காலமாக உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். 

மனநலம் பாதிப்பு-வாலிபர் விமானம் மூலம் அனுப்பி வைப்பு
இசிஆர்சி ஊழியர்களுடன்
ஜசந்தன்(தோளில் சால்வை அணிந்திருப்பவர்)

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அருணாச்சலேஸ்வரை தரிசிக்க திருவண்ணாமலை வந்த இவர் மனநலப் பாதிப்பு காரணமாக இலங்கைக்கு திரும்பி செல்ல முடியாமல் நுழைவு அனுமதி சீட்டு (VISA) முடிவடைந்த பின்னரும் இங்கேயே சுற்றி திரிந்தார். அவரை மீட்டு சிகிச்சை அளித்து மனநிலையில் நல்ல முன்னேற்றம் வந்த பிறகு, ECRC பிரிவில் உள்ள பணியாளர்கள் அவரது உறவினரை தொடர்பு கொண்டனர். 

இதனையடுத்து கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வழிகாட்டுதல் படி வாலிபர் ஜசந்தனை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்ப, நலப்பணிகள் இணை இயக்குநர் மலர்விழி, அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ஹரிஹரன் தலைமையில், மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மைய மருத்துவ அலுவலர் அபிநயா, மனநல துறைத் தலைவர் சிவலிங்கம், உளவியலாளர் ராக் வினோசஸ், சமூகப் பணியாளர்கள் நவநீத கிருஷ்ணன், சுந்தர், திவ்யா மற்றும் சத்யா ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர். 

இதன் காரணமாக வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தை (FRRO) தொடர்பு கொண்டு அவரது நுழைவு அனுமதிச்சீட்டு (VISA) புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஜசந்தனை அவரது சொந்த நாடான இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பத்திரமாக வீடு சென்றவுடன் அவர்களது உறவினர்கள் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மைய ஊழியர்களையும், மாவட்ட ஆட்சித்தலைவரையும் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தனர்.

-------------------------------------------


Next Post Previous Post

No comments