மாநகராட்சி அறிவிப்பு-இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மாநகராட்சி அறிவிப்பு-இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை கொண்டாடும் வகையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 

மாநகராட்சி அறிவிப்பு-இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் நன்றி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியை தரம் உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர்களுக்கு நகர மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியிருக்கிறார்.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

இதில் அண்ணாதுரை எம்.பி, மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட கழக பொருளாளர் பன்னீர்செல்வம், நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம், நகர கழக செயலாளர் கார்த்தி வேல்மாறன், கவுன்சிலர் மண்டி பிரகாஷ், அமைப்பு சாரா ஓட்டுநரணி மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மாநகராட்சி அறிவிப்பு, அடுத்து என்ன?

தமிழ்நாட்டில் ஏற்கனவே 21 மாநகராட்சிகள் உள்ளன. புதியதாக 4 மாநகராட்சிகளால் இது 25 ஆக உயரும். திருவண்ணாமலை மாநகராட்சியில் வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், சே.கீழ்நாச்சிபட்டு, நொச்சிமலை, ஏந்தல்,  தென்மாத்தூர், கீழ்கச்;சிராப்பட்டு, மேலத்திகான், சாவல்பூண்டி, நல்லவன் பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை,  தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்பியந்தல், மலப்பாம்பாடி ஆகிய 18 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இது தவிர அண்ணாமலையார் மலை மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளும் இணையும். இதன் மூலம் 104.51சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக மாநகராட்சி விளங்கும்;.

மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சி வார்டுகள் பிரிக்கப்படும். தலைவர் பதவி இனி மேயர் என்றழைக்கப்படும். மாமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் மேயராவார். மேலும் ஐஏஎஸ் அதிகாரி மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்படுவார். இதெல்லாம் படிப்படியாக நடைபெறும். 

மக்கள் மனநிலை

மாநகராட்சியானால் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை உயரும். மேலும் ஊராட்சிகளில் தற்போது உள்ள 100 நாள் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்ற பயத்தின் காரணமாக பல ஊராட்சிகள் மாநகராட்சியில் இணைய தயக்கம் காட்டின. இதனால் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கொடுக்காமல் இருந்தன. 

இதையடுத்து பிடிஓ தலைமையில் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்களிடம் பேசி சாதகமாக தீர்மானத்தை பெற்று அரசுக்கு அனுப்பினர். திமுகவைச் சேர்ந்தவர் தலைவராக இருக்கும் உடையானந்தல் ஊராட்சி கடைசி வரை மாநகராட்சியோடு இணைய இசைவு தெரிவிக்கும் தீர்மானத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய ஊராட்சியான அடிஅண்ணாமலையில் நடைபெற்ற கிராம சபையில் மாநகராட்சியில் இணைய மக்கள் தெரிவித்தனர். இதே போல் வேங்கிக்காலில் திமுக தெருமுனை பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பனை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு பெரிய ஊராட்சியாக விளங்கும் வேங்கிக்காலை மாநகராட்சியோடு இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 

18 ஊராட்சிகள், திருவண்ணாமலை மாநகராட்சியோடு இணைவதால் அங்கு வளர்ச்சி பணிகள் அதிகரிக்கும், கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கை தரம், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பது ஆளும் கட்சியினரின் கருத்தாக உள்ளது. 

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடலூர் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றதா? என்ற கேள்வி எழாமலும் இல்லை. 

------------------------------------------



Next Post Previous Post

No comments