மாணவர்களுக்கு ரூ.3 கோடி கல்வி கடன்

மாணவர்களுக்கு ரூ.3 கோடி கல்வி கடன் 

அடுத்த தலைமுறைக்கு வழங்க முன் உதாரணமாக கல்வி கடனை திருப்பி செலுத்துங்கள்-கலெக்டர் வேண்டுகோள் 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 63 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 45 லட்சம் கல்வி கடனாக வழங்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. 

மாணவர்களுக்கு ரூ.3 கோடி கல்வி கடன்

இந்த முகாமில் 400 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் தகுதி பெற்ற 63 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 45 லட்சத்து 43 ஆயிரம் வழங்கப்பட்டது. 

இந்தியன் வங்கி மூலம் 26 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 17 ஆயிரமும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் 10 மாணவர்களுக்கு ரூ.41 லட்சத்து 10 ஆயிரமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 7 மாணவர்களுக்கு ரூ.19 லட்சத்து 64 ஆயிரமும், பாங்க ஆப் பரோடா சார்பில் 6 மாணவர்களுக்கு ரூ.84 லட்சத்து 60 ஆயிரமும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் 4 மாணவர்களுக்கு ரூ.16 லட்சத்து 39 ஆயிரமும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மூலம் 5 மாணவர்களுக்கு  ரூ.70 லட்சத்து 93 ஆயிரமும், கனரா வங்கி மூலம் 3 மாணவர்களுக்கு ரூ.6 லட்சத்து 60 ஆயிரமும், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் 1 மாணவருக்கு ரூ.1 லட்சமும், ஐடிபிஐ வங்கி மூலம் 1 மாணவருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது. 

கல்வி கடனை வழங்கி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது,  

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கல்வி கற்றால் மட்டுமே முன்னேற முடியும். கல்வி தான் அழகு. கல்வி தான் செல்வம், கல்வி இல்லாமல் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போய் விடக்கூடாது என்பதற்கு, ஒருவர் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தான் கல்வி கற்க முடியவில்லை என்கிற சூழ்நிலை வரக்கூடாது என்ற அடிப்படையில் கல்வி கடன் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. 

கல்வி கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்பதற்காக இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக பல இடங்களில் கல்வி கடன் அளிக்க மறுக்கின்றனர். எனவே அந்த சிக்கலை நீக்குவதற்காக அனைத்து வங்கிகளும் இணைந்து இந்த சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. 

வங்கிகளில் கல்வி கடன் பெறும் மாணவர்கள் அந்த கல்வி கடனை திருப்பி செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் கல்வி கடன் அடுத்த தலைமுறைகளுக்கு வழங்க ஒரு முன் உதாரணமாக இருக்கும்.

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார். 

முகாமில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் மு.அருண்பாண்டியன், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Post Previous Post

No comments