சட்ட நெறிமுறைகளை குழி தோண்டி புதைப்பதா?
சட்ட நெறிமுறைகளை குழி தோண்டி புதைப்பதா?
வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான
நடவடிக்கையை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காமராஜர் சிலை அருகில் இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ. ஷமியுல்லாஹ் தலைமை தாங்கினார். கிளை தலைவர்கள் என். நபிஜான், ஏ. வக்கீல் பாஷா, ஏ.எம். முஹம்மத் கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் எஸ். முஹம்மத் யாசிர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
கியான் வாபி பள்ளிவாசலில் கீழ்த்தளத்தில் பூஜை செய்து கொள்ள சங்க பரிவார சக்திகளுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கியுள்ள தீர்ப்பு இஸ்லாமியர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாபர் மசூதியும் இதே போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி தான் இஸ்லாமிய தரப்பிடம் இருந்து பறித்தனர்.
அடுத்து காசி மற்றும் மதுராவில் உள்ள பள்ளிவாசல்களை பறிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சங்கப் பரிவார சக்திகள் முன்னெடுத்து வருகின்றனர். இதைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இந்திய நாடு சுதந்திரம் பெறும்போது எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளிக்கும் 1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
ஜனநாயகமும் சட்ட நெறிமுறைகளும் குழி தோண்டி புதைக்கப்படும் இக்கால கட்டத்தில் அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து கண்டன கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஏ. முஹம்மத் ரியாஸ், பொருளாளர் கே. அப்துல் ரகுமான், மாவட்ட துணைத் தலைவர் சி. காதர் ஷெரீப், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர். அமீன், எஸ். ஆஷிக் யூசுப், மற்றும் நிர்வாகிகள் ஏ. உபயதுல்லா, ஜி. அப்துல் மவ்லா, முகமது பாஷா, அப்பாஸ், எஸ். ஜலால் தீன், அப்துல் கபூர், ரிபாய் மூஸா, ஏ.எம். ஷேக் இஸ்மாயில், எம். மாலிக் பாஷா உட்பட ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் எஸ்.ஆர்.எம். முஸ்தபா நன்றி கூறினார்.
No comments