பியூட்டி பார்லர் பெண்ணுக்கு சரமாரி வெட்டு
பியூட்டி பார்லர் பெண்ணுக்கு சரமாரி வெட்டு
இன்ஸ்டாகிராமில் பழகிய ஆசாமியை போலீஸ் தேடுகிறது.
திருவண்ணாமலையில் பியூட்டி பார்லரில் வேலை செய்த பெண்ணை சரமாரியாக வெட்டிய இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுதா(வயது 35). தந்தை பெயர் ராமசாமி. சுதா, ஒரிசாவைச் சேர்ந்த நேத்ரா என்பரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
சுதா, சின்னகடைத்தெருவில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இன்று காலை அவர் பியூட்டி பார்லரில் இருந்த போது அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் அங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. 2பேருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்த நபர் பேப்பர் கட் செய்யும் கத்தியால் சுதாவின் முகத்தில் சரமாரியாக வெட்டி விட்டு ஓடி விட்டார்.
சுதாவின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் மாடி மீதிருந்து அவரை ரத்த காயங்களுடன் கீழே தூக்கி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுதாவிற்கு இன்ஸ்டாகிராமில் மோனிக்ராஜ் என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கும் நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்தான் இந்த செயலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு தாடை பகுதிகளிலும் தையல்கள் போடப்பட்டு சுதா பேச முடியாத நிலையில் இருப்பதால் போலீஸ் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பியூட்டி பார்லரில் இருந்த சுதாவின் செல்போனையும், அந்த நபரின் செல்போனையும் கைப்பற்றினர்.
சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? உண்மையான பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஆரம்பித்திருக்கிறா? அல்லது போலி பெயரில் ஆரம்பித்திருக்கிறா? என்ற விவரங்களை கண்டுபிடிக்க, கைப்பற்றியுள்ள செல்போனில் பதிவான பதிவுகளை கொண்டு போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதியல் பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments