திருவண்ணாமலை தொகுதியை கேட்டும் காங்கிரஸ்
திருவண்ணாமலை தொகுதியை கேட்டும் காங்கிரஸ்
மேலிடப் பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம் தகவல்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கேட்டுள்ளோம் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம் கூறினார்.
திருவண்ணாமலை பேகோபுர தெருவிலுள்ள நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் என்.வெற்றிசெல்வன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மேலிடப் பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் தேர்தல் களப்பணியாற்றிட வேண்டும். இந்தியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கிட தமிழகத்திலுள்ள 39க்கு 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற தேர்தல் களப்பணியாற்றிட காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும்.
மாவட்ட தலைவர் (குமார்) எப்படி போனாரோ அப்படியே திரும்பி வந்து விட்டார். யாரும் வருத்தப்பட வேண்டாம். எப்படி பழைய வேகம் இருந்ததோ, அதே வேகம் தான் இருக்கும். இந்த முறை நமக்கு சிறப்பான வாய்ப்பு என்னவென்றால் திருவண்ணாமலை தொகுதியும் நாம் கேட்டிருக்கிறோம். அதனால் உங்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்டாயம் கிடைப்பார்.
நமக்கு பாராளுமன்ற உறுப்பினர் வரப்போகிறார் என்றால் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் மனதில் நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை வட்டார தலைவர்கள் இந்த கூட்டத்தில் வந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. வந்திருக்கிற வட்டார தலைவர்கள் தான் ரயில் இன்ஜின் மாதிரி. நீங்கள் தான் ஒவ்வொரு ஊராட்சிக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சண்முகம், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் குணசேகரன், நகர துணை தலைவர் டி.குப்பன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.கே.காமராஜ் நன்றி கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பின் கீழ் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டதில் முதன்முதலாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவைச் சோந்;த காடுவெட்டி குரு 2வது இடத்தை பெற்றார்.
2014ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வனரோஜா வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை தோல்வி அடைந்தார். 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை வெற்றி பெற, அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு அழுத்தம் கொடுத்திருப்பது திருவண்ணாமலை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-----------------------------------
No comments