கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் நிலத்தை மீட்டு தரக் கோரி விவசாயி ஒருவர் கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கலெக்டர் போட்ட திடீர் தடையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. புதிய கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர். காலை 10-15 மணிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வருகை தந்து மாடிக்கு செல்லும் வழியில் நின்றிருந்தவர்களிடம் மனுக்களை வாங்க ஆரம்பித்தார்.
அப்போது தனது மனைவியோடு வந்திருந்த வாலிபர் ஒருவர் தன் உடம்பில் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் அதை தடுத்து நிறுத்தினர். இதைப்பார்த்த கலெக்டர் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் அவர் மனு மீது உரிய விசாரணை நடத்திடவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். கலெக்டர் முன் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயன்றவர் பெயர் சுரேஷ். செங்கம் வட்டம் சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பூர்விக நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து பயிர் செய்ய விடாமல் தடுப்பதாகவும், ரூ.10 லட்சம் தந்தால் நிலத்தை தந்து விடுவதாக மிரட்டுவதாகவும், இது குறித்து செங்கம் போலீசில் 6 முறையும், கோட்டாட்சியரிடம் 2 முறையும், கலெக்டர் அலுவலகத்தில் 3 முறையும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிறகு அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சுற்றிப்பார்த்தார். அப்போது அலுவலகத்தின் பின்புறம் அரசு ஊழியர்கள் நிறுத்தியிருந்த இரண்டு சக்கர வாகனங்கள், மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதை பார்த்து அவற்றை இனிமேல் இங்கு நிறுத்த கூடாது எனவும், வெளியில் நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கலெக்டரின் இந்த உத்தரவால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் வாகனங்களை வெளியில் நிறுத்தினால் பாதுகாப்பில்லை, ஏற்கனவே வாகனங்கள் திருடு போய் இருக்கிறது, எனவே உள்ளேயே நிறுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுவை பதிவு செய்யும் பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் உட்கார வசதியாக சேர்களை போட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 250 நாற்காலிகள் வரவழைக்கப்பட்டு போடப்பட்டது. இதனால் பெண்களும், வயதானவர்களும் கலெக்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
No comments