திருவண்ணாமலை:17வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம்
திருவண்ணாமலை:17வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம்
11 வருடங்களுக்கு பிறகு 2வது கட்டம் துவக்கம்
ரூ.97 கோடி திட்ட பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.97 கோடியே 67 லட்சத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சியில் முதல் கட்டமாக 22 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2013ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அப்போது இந்நகராட்சி திமுக வசம் இருந்தது. அந்த நேரத்தில் இப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. பாதாள சாக்கடை குழியில் சிலர் தவறி விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டது. உயிரிழப்பும் உண்டானது. இது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து பாதாள சாக்கடை திட்டத்தின் 2வது கட்ட பணிகள் இன்று தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை நெமிலியிலிருந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நகர் 5வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன், நகரமன்ற ஆணையாளர் வசந்தி, எ.வ.வே. கம்பன் மற்றும் பலர் உடனிருந்தார்.
திருவண்ணாமலை நகராட்சியில் விடுப்பட்ட 17 வார்டு பகுதிகளான போளுர் ரோடு, அவலூர்பேட்டை சாலை, பல்லவன் நகர், மத்திய பேருந்து நிலைய பகுதிகள், புதுத் தெரு, சகாயம் நகர், பெரும்பாக்கம் சாலை, செங்கம் சாலை, தேனிமலை, தாமரை நகர், அண்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.97.67 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு எஸ்.பி.ஆர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும், 9ஆயிரத்து 192 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் எனவும், 18 சாலையோர கழிவு நீரேற்று நிலையமும், 4 கழிவு நீரேற்று நிலையமும். 1 சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments