திருவண்ணாமலைக்கு இனி கிளாம்பாக்கத்திலிருந்து பஸ்கள்

திருவண்ணாமலைக்கு இனி கிளாம்பாக்கத்திலிருந்து பஸ்கள்

29ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் - பொது மேலாளர் தகவல்

திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலைக்கு இனி கிளாம்பாக்கத்திலிருந்து பஸ்கள்

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, 30.01.2024 முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு, தின்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்.

திருவண்ணாமலை, போளூர், மற்றும் வந்தவாசி ஆகிய ஊர்களில் இருந்து இன்று (29.01.2024) இரவு 12 மணிக்கு மேல் சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இனி கிளாம்பாக்கம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின்னர் தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் சென்றடையும். மேற்கண்ட ஊர்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

மேலும், மாதவரம் பேருந்து முனையம் வரை இயக்கப்படும் பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி, அம்பத்தூர் எஸ்டேட் வழியாக MMBT-க்கு இயக்கப்படும்.

30.01.2024 முதல் மேற்கண்ட ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. எனவே இப்பேருந்து இயக்க மாற்று ஏற்பாட்டின்படி பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஏற்கனவே ஆரணி, செய்யாறு பகுதிகளில் இருந்து பூந்தமல்லி மார்க்கமாக சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் எவ்வித மாற்றமும் இன்றி கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

----------------------------------------


Next Post Previous Post

No comments