தடையை நீக்க முதல்வருக்கு திருவண்ணாமலை திமுக கோரிக்கை
தடையை நீக்க முதல்வருக்கு திருவண்ணாமலை திமுக கோரிக்கை
நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் 8கிலோ மீட்டருக்கு பட்டா வழங்குவதற்கு உள்ள தடை ஆணையை தற்காலிகமாக நீக்க கோரி தமிழக முதல்வருக்கு மாவட்ட திமுக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளது.
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அனைவரையும் வரவேற்றார்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், மாவட்ட கழகச் செயலாளருமான எ.வ.வேலு தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் 1891இல் திராவிட மகாசன சபை தோற்றுவித்தவரும், சாதி எதிர்ப்பு, சமூக சேவை, தமிழறிஞர், சித்த மருத்துவருமான அயோத்திதாசப் பண்டிதருக்கும், இந்தியா முழுவதும் மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை, இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கும் சிலை அமைத்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வது, டிசம்பர்-17ல் சேலத்தில், உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 10ஆயிரம் இளைஞர்கள் சீருடையுடன், கலந்து கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நகரம் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள 8கிலோ மீட்டர் அடங்கிய பகுதிகளுக்கு பட்டா வழங்குவதற்கு தடை ஆணை உள்ளது. இப்பகுதியில் வீடுகட்டி வசிக்கும் பட்டா இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு பட்டா கிடைக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு இந்த தடைச் சட்டத்தை தளர்த்தி பட்டா வழங்குமாறு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அத்பேத்குமார், ஒ.ஜோதி மற்றும் எ.வ.வே.கம்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஒன்றியக்குழு, நகராட்சி, பேரூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் நன்றி கூறினார்.
No comments