டாக்டரின் ஸ்கூட்டியில் புகுந்த கொம்பேறிமூக்கன்

டாக்டரின் ஸ்கூட்டியில் புகுந்த கொம்பேறிமூக்கன்

தீயணைப்பு வீரர்களுக்கு போக்குகாட்டிய பாம்பால் பரபரப்பு 

திருவண்ணாமலையில் பெண் டாக்டர் ஒருவரின் ஸ்கூட்டியில் பதுங்கிய கொம்பேறிமூக்கன், தீயணைப்பு வீரர்களிடம் சிக்காமல் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் காட்டியது. 

டாக்டரின் ஸ்கூட்டியில் புகுந்த கொம்பேறிமூக்கன்

திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் முன்பு நகர நல மையம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஸ்கூட்டியை அங்குள்ள மரத்தின் அடியில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். அப்போது மரத்தில் இருந்த பாம்பு ஒன்று இறங்கி வந்து அவரது ஸ்கூட்டியில் புகுந்து விட்டதை அங்கு இருந்தவர்கள் பார்த்து டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். 

அவர்கள் வந்து ஸ்கூட்டியில் தேடினர். ஆனால் பாம்பு சிக்கவில்லை. இதையடுத்து பாம்பு வெளியே வருவதற்கு டெட்டால் கலந்த தண்ணீரை தீயணைப்பு துறையினர் ஸ்கூட்டியில் ஊற்றினர். அப்போதும் பாம்பு வரவில்லை. இதனால் பைக் மெக்கானிக் வரவழைக்கப்பட்டார். அவர் ஸ்கூட்டியின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாக பிரித்து பாம்பு இருக்கிறதா? என பார்த்தார். 

அப்போது ஸ்கூட்டியின் முன்புற பகுதியில் பதுங்கியிருந்த பாம்பு எகிறி தரையில் குதித்து ஓடியது. உடனே தீயணைப்பு வீரர் பூட்ஸ் அணிந்திருந்த காலால் அதை மிதித்து ஓடவிடாமல் தடுத்தார். பிறகு தீயணைப்பு துறையினர் பாம்பை இடுக்கியால் பிடித்து பைப்பில் அடைத்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

பிடிபட்டது 4 அடி நீளம் உள்ள கொம்பேறிமூக்கன் எனப்படும் மரமேறி பாம்பாகும். பொதுவாகவே மரத்தின் கீழோ, அல்லது அடர்த்தியான புதர்கள், கற்களின் அருகிலோ வாகனங்களை நிறுத்தியிருந்தால் வண்டியை செக் செய்து எடுப்பது நல்லது என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

Next Post Previous Post

No comments