திருப்பதிக்கு 1000 பேர் பாதயாத்திரை-வேண்டுதல் என்ன தெரியுமா?
திருப்பதிக்கு 1000 பேர் பாதயாத்திரை-வேண்டுதல் என்ன தெரியுமா?
15 கிராம மக்கள் "கோவிந்தா " முழக்கத்துடன் மேற்கொண்ட பக்தி யாத்திரை-குழந்தையை தோள் மீது உட்கார வைத்து நடைபயணம்.
திருவண்ணாமலை பகுதியிலிருந்து 15 கிராமங்களைச் சேர்ந்த 1000த்துக்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர்.
"கோவிந்தா" என்ற பக்தி முழக்கத்துடன் மனமுருக வேண்டி திருப்பதிக்கு செல்லாதோர் யார் இருக்கிறார்கள்? திருப்பதிக்கு சென்றால் திருப்பம் நிகழும் என்பதனாலேயே காரியங்களில் வெற்றியை தேடியும், தொழிலில் உயர்வுகளை எதிர்பார்த்தும் திருப்பதிக்கு அடிக்கடி செல்பவர்கள் பலர். ஆனால் 24 வருடங்களாக கிராம மக்கள் ஒன்று கூடி திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று வரும் நிகழ்வு திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர்புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பன்று சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் ஒன்று கூடி மாலை அணிந்து சிறப்பு பூஜையில் பங்கேற்கின்றனர்.
பிறகு அங்கிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்படுவர். அதே போல் இந்த வருடமும் மலமஞ்சனூர், தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியார்பாளையம், கீரனூர், வேப்பூர் செக்கடி, விஜயப்பனூர், தேவரடியார்குப்பம், டி.வேலூர், மோட்டூர், பக்கிரிபாளையம், உடையார்குப்பம், கல்நாட்டூர் புதூர், விருப்பாட்சி, கொளமஞ்சனூர் ஆகிய 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் மாலை அணிந்து திருப்பதிக்கு பாத யாத்திரை புறப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.சுப்பராயன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.சரவணன் முன்னிலை வகித்தார். இதில் ஏழுமலை, சேகர், ஆலுடையான் மற்றும் ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
1000த்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறுவர்-சிறுமியர்களும் மஞ்சள் ஆடை அணிந்து மூட்டை, முடிச்சுகளை சுமந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். பலர் தங்களது பிள்ளைகளை தோளில் சுமந்து நடந்து சென்றனர்.
இது குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன் கூறுகையில், உலகிற்கு குருவாக பாரத தேசம் திகழவும், கொரோனா நோய் முழுமையாக ஒழியவும், உலக நன்மைக்காகவும் திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறோம் என்றார்.
24 வருடங்களாக பாதயாத்திரை செல்பவர்கள் கூறுகையில் திருப்பதிக்கு யாத்திரையாக சென்று வேண்டினால்தான் எங்களுக்கெல்லாம் மனநிம்மதி கிடைக்கும், கிராமம் செழிப்படையும், மக்களும் நன்றாக இருப்பார்கள். இதை கண்கூடாக பார்த்து வருகிறோம் என்றனர்.
இவர்கள் திருவண்ணாமலை, போளுர், வேலூர் வழியாக திருப்பதிக்கு 300 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று 3800 படிக்கட்டுகள் ஏறி அவர்கள் திருமலைக்குச் சென்று வைகுண்ட ஏகாதசி அன்று வெங்கடேச பெருமாளை தரிசிக்கின்றனர்.
------------------------------
No comments