சிட்பண்ட் நிறுவனம், ஓட்டல் கடை சூறை
தீபாவளி பொருட்கள் கிடைக்க தாமதமானதால் செய்யாறில் சிட்பண்ட் நிறுவனம், மளிகை, ஓட்டல் கடை சூறையாடப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஏசி, பீரோ, சோபா மற்றும் கையில் கிடைத்த பொருட்களை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறில் உள்ள காஞ்சிபுரம் சாலையில் செய்யார் ஏபிஆர் என்ற பெ யரில் சிட் பண்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை அல்தாப் என்பவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பொதுமக்களிடமிருந்து ரூ.100 முதல் ரூ.5000 வரை வசூலித்து பண்டிகை காலங்களில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் பல்லாயிரக்கணக்கானோர் மாத சீட்டும் கட்டி வந்தனர். இந்நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் மளிகை பொருட்கள், பட்டாசு மற்றும் பல்வேறு பரிசுகளை அறிவித்திருந்தது. இந்த பொருட்களை வழங்க காலதாமதம் ஆனதாக சொல்லப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பொருட்களை வழங்கி வரும் நிறுவனம் தீபாவளிக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் பொருட்களை வழங்காதது பொதுமக்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நேற்று இரவு சிட் பண்ட் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கானோர் சென்று முற்றுகையிட்டனர். அதன்பிறகு பொறுமையிழந்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து சோபா, ஏசி, பீரோ, மின்விசிறி, அலமாரிகள், நாற்காலிகள், டிவி மற்றும் கையில் கிடைத்த பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றனர். பொருட்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இதேபோல் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மளிகை கடையில் இருந்த மூட்டைகளையும் கும்பல் அள்ளிச் சென்றது. மேலும் அதே நிறுவனத்திற்கு சொந்தமான ஓட்டல் கடையும் சூறையாடப்பட்டது.
இதுகுறித்து சிட் பண்ட் காவலாளி, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரை பார்த்ததும் ஏசி, சோபா, பீரோ போன்ற பெரிய பொருட்களை எடுத்துச்செல்ல முடியாததால் ரோட்டில் போட்டு விட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது.
சூறையாடப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் உண்மையாகவே சீட்டு கட்டிவர்களா? அல்லது சிட் பண்ட் வாடிக்கையாளர் என்ற போர்வையில் நுழைந்த கும்பலா? என செய்யாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருட்கள் வராத ஆத்திரத்தில் பொருட்களை தூக்கிச் சென்றது தெரிய வந்தது.
இந்நிலையில் சிட் பண்ட் நிறுவனம் சூறையாடப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். இதனால் அசாம்பாவிதத்தை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இச்சம்பவம் செய்யாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments