திருவண்ணாமலையில் சூப்பர் மார்க்கெட் முற்றுகை

திருவண்ணாமலையில் சூப்பர் மார்க்கெட் முற்றுகை

சிறப்பு தவணை முறை திட்டத்தின் கீழ் பொருட்கள் சரிவர தரப்படாததால் திருவண்ணாமலை ஏ2ஏ என்ற சூப்பர் மார்க்கெட்டை பணம் கட்டியவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை வாழை தோட்டத் தெருவில் ஏ2ஏ ஷாப்பிங் ப்ளாசா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சூப்பர் மார்க்கெட், பர்னீச்சர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் ஆகியவற்றை நடத்தி வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தார் 6 வருடங்களாக சிறப்பு சிறு சேமிப்பு திட்டத்தையும் துவக்கி நடத்தி வந்தனர். 

அதன்படி ரூ.350லிருந்து ரூ.5 ஆயிரம் வரை மாத தவணை செலுத்துபவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ.1000 கட்டுபவர்களுக்கு இனிப்பு, காரம், பட்டாசு பாக்ஸ் உடன் 2 டோர் உட்பீரோ அல்லது குஷன் சோபா அல்லது 6 அடி பூஜை மண்டபம் ஒன்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.5 ஆயிரம் செலுத்துபவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது. 

இதோடு மட்டுமன்றி தங்க காசு, ரூ.300 கட்டியவர்களுக்கு இனிப்பு, காரம், பட்டாசு பாக்ஸ் உடன் 51 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும், ரூ.500 கட்டியவர்களுக்கு இனிப்பு, காரம், பட்டாசு பாக்ஸ் உடன் 71 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. 

 

திருவண்ணாமலையில் சூப்பர் மார்க்கெட் முற்றுகை

ஏ2ஏ நிறுவனத்தின் சிறுசேமிப்பு திட்டங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பணம் கட்டி முடித்தவர்களுக்கு சரிவர பொருட்கள் தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவு அந்த சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை நகர போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினரிடம் விசாரித்ததில் 900 நபர்களுக்கு மேல் பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், ஆர்டர் போட்ட இடத்தில் பொருட்கள் வழங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டதனால் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் வழங்க முடியவில்லை எனவும், பொருட்கள் வந்து சேர்ந்ததும் அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்பட்டு விடும் எனவும் தெரிவித்தனர். 

முறையாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

படங்கள்-பார்த்திபன்

Next Post Previous Post

No comments