அரிவாளால் வெட்டப்பட்டவர் உயிரிழப்பு-பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருவண்ணாமலையில் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது வீடு உள்ள சின்னகடைத் தெரு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இருபுறமும் தடுப்புகள் அமைத்து வேறு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை வடவீதி காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் உதயமுத்து (40), திமுக உறுப்பினர். முன்னாள் நகர இளைஞரணி துணை அமைப்பாளர். கடந்த 30ந் தேதி இவர் தனது நண்பர் ராஜேஷை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு வேலூர் ரோட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
உதயமுத்து |
அப்போது காரிலும், பைக்கிலும் வந்த கும்பல் ஒன்று அவர்களை வழிமடக்கியது. இதனால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு 2 பேரும் ஆவின் நிறுவனம் பக்கம் ஓடினர். இதில் ராஜேஷ், ஆவின் நிறுவனத்துக்குள் ஓடி தப்பினார். உதயமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சிகிச்சைக்காக முதலில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பிறகு வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், இறந்த உதயமுத்து வசித்த வந்த வடவீதி காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சியாம் சுந்தர்(வயது 30), வேங்கிக்கால் எழில்நகரைச் சேர்ந்த பாலாஜி(24), ஜன்னத் நகரைச் சேர்ந்த அஷ்ரப்(21), வேங்கிக்கால் ஓம்சக்தி நகர் செல்வபுரத்தைச் சேர்ந்த அருண்(21), ஜெய்பீம் நகரை சேர்ந்த பிரவீன்(21) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த 18 வயதுள்ள சிறுவன், பொற்குணம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் ஆகிய 2 பேர் கலசப்பாக்கம் போலீசில் சரண் அடைந்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் 7 பேர் கைதாகி உள்ளனர்.
இடம் பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதயமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து உதயமுத்து வீடு அமைந்துள்ள சின்னகடைத் தெரு பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் இருபுறமும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. இறுதி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
No comments