நாங்கள் நினைத்தால்...திமுகவிற்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை
நாங்கள் நினைத்தால் ஆட்சியாளர்களை அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாகவும் மாற்றி விடுவோம் என திமுகவிற்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பார்த்திபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 லட்சம் பணியிடங்களை நிரப்பிடுக
தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரவேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு திட்டம் காலரையின்றி தள்ளிபோடப்பட்டிருப்பதை ரத்து செய்து மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 6லட்சம் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் டி.ரமேஷ்பாபு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாநில தலைவர் ஏ.சபரிராஜ், தமிழ்நாடு நிலஅளவை ஒன்றிப்பு மாநில தலைவர் ஜெ.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவரும் மாநில ஒருங்கிணைப்பாளருமான கே.வி.ரக்ஷித் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ந் தேதி முதல் 24ந் தேதி வரை ஆசிரியர்-அரசு பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கமும், 25ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், டிசம்பர் 28ந் தேதி சென்னையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போராட்டமும் நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது,
20 ஆண்டுகளாக தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்பி விட்டன. பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலில் நான்தான் கொடுப்பேன் என சொன்ன நம்ம முதல்வர் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார். சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்து விட்ட 54 ஆயிரம் பேர்களுக்கு நோ பென்ஷன் ஸ்கீம் என அறிவித்து அதைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இரும்பு பெண்மணியையே பார்த்து விட்டோம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பென்ஷனை 30 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறார்கள். பாவம் அவங்களெல்லாம் ஒண்ணுமே இல்லாதவங்க. அவர்களுக்கு ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் 5 ஆயிரமாக உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடியாவது தனது ஆட்சியை காப்பாத்திக் கொள்ள எம்.எல்.ஏக்களுக்கு 10ஆயிரமாக இருந்த பென்ஷனை 20ஆயிரமாக உயர்த்தி விட்டுச் சென்றார். ஆனால் மெஜாரிட்டியாக இருக்கிற இவர்(ஸ்டாலின்)எதற்காக அவர்களுடைய பென்ஷனை உயர்த்துகிறார்? அவர்களை மட்டும் ஏன் வளப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்? இவருக்கும் உள்ளுக்குள் ஏதாவது பயம் இருக்கிறதோ, என்னவோ?
நாம் நீண்ட நெடுங்காலமாக ஏறக்குறைய இருபது ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் எத்தனை எல்லாம் சட்டம் இருக்கின்றது, அத்தனை சட்டங்களும் பாயும் என்று இதே ஜாக்டோ-ஜியோ மீது மிகவும் ஆக்ரோஷமாக கூறிய இரும்பு பெண்மணி ஜெயலலிதா, சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று ஆட்சி செய்த கலைஞர் ஆகியோரையெல்லாம் பார்த்து விட்டு வந்து இருக்கோம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இன்றைக்கு எடப்பாடிக்கு கண்ணுக்கு தெரிகிறது. அவர் ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும் செய்யவில்லை. அரசியல்வாதியாக இருந்த மு.க.ஸ்டாலின், தன்னிச்சையாக ஜாக்டோ-ஜியோவுக் கு போராட்டக்காரர் போல இன்றைய அமைச்சரவை சகாக்களோடு வந்து நமக்கு ஆதரவு கரம் நீட்டினார். ஆட்சியாளராக மாறியதும் பாராமுகம் காட்டுகிறார்.
எடப்பாடி தவழ்ந்து வந்து ஆதரவு
எங்கள் கோரிக்கைளை அழைத்து பேசுகிறார்கள். முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம், போய் வாங்க என சொல்லுகின்றனர். அதிமுக ஆட்சியிலும் இப்படித்தான் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவும், அதிமுகவும் ஒன்றாகத்தான் உள்ளது.
அதிமுக ஆட்சியில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்திய போது கோட்டையை சுற்றி முள்வேலியை அமைத்து எடப்பாடி பழனிச்சாமி தன்னை பாதுகாத்து கொண்டார். இன்று எங்களுக்கு ஆதரவு தருவதாக கூறுகிறார். சசிகலாவிடம் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கியவர், இன்று எங்களிடமும் தவழ்ந்து வந்து ஆதரவு தெரிவிப்பார். அந்த நிலைமைக்கு நீங்கள் (திமுக) வந்து விடாதீர்கள்.
ஆட்சியாளர்கள், அரசியல்வாதியாக மாறுவதற்கு நாங்கள் மட்டுமே காரணம். ஜாக்டோ-ஜியோ நினைத்தால் ஆட்சியாளர்களை அரசியல்வாதியாகவும், அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக மாற்றும் ஒரே தாரக மந்திரத்தை தன்னுள் கொண்டுள்ளவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்பதை இந்த ஆட்சியாளர்கள் மறக்க கூடாது. மாண்புமிகு. முதலமைச்சர் என்ற வார்த்தையா? அல்லது மாண்புமிகு. டேஷ் என்ற வார்த்தையா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.முருகன், எம்.சுந்தர்ராஜ், எஸ்.பழனி, பி.மாரிமுத்து மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
---------------------------------------
No comments