ஆன்லைனில் தீபாவளி பொருட்களை வாங்க போகிறீர்களா?
விழா காலங்களில் மோசடி இணைய தளத்தை நம்பி பொருட்களை வாங்குவததை தவிர்க்குமாறு திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் பொது மக்களை எச்சரித்துள்ளார்.
விழாக் காலங்களில் ஆடை ஆபரணங்கள் மற்றும் பட்டாசுகள் தேவை அதிகரிப்பால், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத மிகக் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். கடந்த சில நாட்களாக இது போன்ற மோசடி தொடர்பாக பல புகார்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால் பண்டிகை காலங்களில் இணையதளத்தில் ஆர்வத்துடன் பொருட்களை வாங்குகிறார்கள். ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பு எண் மற்றும் இணையதளம் அணுக முடியாததாகிவிட்டதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும் போய்விட்டது. பொருட்களும் வழங்கப்படாததால் மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.
இது போன்ற மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் கூறியிருப்பதாவது,
1.இணையதளத்தில் பொருட்களை வாங்கும் முன் இணையதளத்தின் உண்மைத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும்.
2.அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண் இணையதளத்தில் உள்ளதா எனச் சரிபார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.
3.நீங்கள் போலி இணையதளத்தில் ஏதேனும் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்திருந்தால், கடவுச் சொற்களை மாற்றவும். மேலும் வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தனை தொடர்பாக வரும் குறுஞ்செய்திகளை(SMS) கண்காணிக்கவும்.
4.பரிவர்த்தனை தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். நீங்கள் மோசடியைப் புகார் அளிக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவுகள் முக்கியமானதாக இருக்கும்.
இது போன்ற பண மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ தொடர்பு கொண்டு புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் உங்களது புகாரை பதிவு செய்யவும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------
No comments