நரித் தோலை வைத்து தாயத்து தயாரித்தவர் கைது

நரித் தோலை வைத்து தாயத்து தயாரித்தவர் கைது

நரி தலைகளை காட்டி பக்தர்களிடம் வசூல் - திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் விற்க முயன்ற போது வனத்துறை வசம் சிக்கினார். 

நரித் தோலை வைத்து தாயத்து தயாரித்தவர் கைது

திருவண்ணாமலையில் நரித் தோலை வைத்து தயாரிக்கப்பட்ட தாயத்தை கார்த்திகை தீபத் திருவிழாவில் விற்க முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். 

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அன்று 2668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகாதீபத்தை தரிசிக்க 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். 

பக்தர்களை கவரும் விதத்தில் திருவண்ணாமலை நகரிலும், கிரிவலப்பாதையிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பலவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. தண்ணீர் கேன், தின்பண்டங்கள் குறிப்பிடப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்களும் உண்டு. மேலும் ஏதோ ஒரு கோயிலின் திருப்பணி என சொல்லி நன்கொடை பெறுபவர்களையும், கைரேகை ஜோசியர்களையும் பவுர்ணமி, தீபத்திருவிழா நாட்களில் கிரிவலப்பாதையில் அதிகம் பார்க்கலாம். 

இது மட்டுமன்றி பூம் பூம் மாட்டை நிறுத்தி வசூல் செய்பவர்களுக்கும், குரளி வித்தை காட்டுபவர்களுக்கும், அதிர்ஷ்ட தாயத்து என சொல்லி விற்பவர்களுக்கும் பஞ்சமில்லை. 

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி உதவி வன பாதுகாவலர் வினோத், வனச்சரக அலுவலர் ஜி.பி.சரவணன் மற்றும் வனவர்கள் ரோந்து சென்றனர். 

நரித் தோலை வைத்து தாயத்து தயாரித்தவர் கைது

அப்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகில் இரட்டை பிள்ளையார் கோயில் தெருவில் நரி தலை மற்றும் தோல்களை கண்காட்சி போல் தரையில் வைத்து நரி தோல் தாயத்தை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும், நோய், நொடி நீங்கும் என பக்தர்களிடம் கூறி தாயத்தை விற்பனை செய்து வந்தவரை கண்டு பிடித்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர் பெயர் டாம்கார் (வயது 56). பெரம்பலூர் மாவட்டம் வெப்பம் தட்டு தாலுக்கா, எறையூர் சக்கரை ஆலை காமராஜர் நகர், நரி குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர். 

அவரிடமிருந்து 3 நரி தலை மற்றும் தோல்களையும், நரி தோலை கொண்டு தயாரிக்கப்பட்ட தாயத்துகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட டாம்கார் கோர்ட்டு உத்தரவின் படி வேலூர் மத்திய சிறைசாலையில் அடைக்கப்பட்டார். 

---------------------------------



Next Post Previous Post

No comments