திருவண்ணாமலையில் வாழும் கலை ஆசிரமம் திறப்பு
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக
திருவண்ணாமலையில் வாழும் கலை ஆசிரமம்
23ந் தேதி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திறந்து வைக்கிறார்
தமிழ்நாட்டிலே முதல்முறையாக திருவண்ணாமலையில் வாழும் கலை ஆசிரமத்தை அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வருகிற 23ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
1982 இல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் உருவாக்கப்பட்ட வாழும் கலை ஆசிரமம் இந்தியாவின் மற்றொரு புகழ்பெற்ற ஆன்மீகத் தளமாகும். இன்று உலகம் முழுவதும் வாழும் கலையின் 156 க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. இந்த உலகப் புகழ்பெற்ற ஆன்மீக நிறுவனம் மூலம் தியானம், சுவாச நுட்பங்கள் மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆன்மீக நகரமாக விளங்கும் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் சந்திரலிங்கம் அருகில் வாழும் கலை ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக திருவண்ணாமலையில் தான் ஆசிரமம் அமைக்கப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரமம் அமைப்பதற்கான நிலம் சொந்தமாக வாங்கப்பட்டுள்ளது. இங்கு மூச்சுப் பயிற்சி, யோகா, சுதர்சன கிரியா, தியானம் மற்றும் மன அமைதி, தன்னம்பிக்கை யுக்திகள் கற்றுத் தரப்படுகிறது.
இந்த ஆசிரமத்தின் திறப்பு விழா வருகிற 23ந் தேதி காலை 10-30 மணியிலிருந்து பகல் 12-30 மணிக்குள் நடக்கிறது. வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தை திறந்து வைத்து அருளாசி வழங்குகிறார். திறப்பு விழா நிகழ்ச்சிகள் 22ந் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது.
அன்று விக்னேஷ்வர பூஜை. புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, வேத ஆகம திருமுறை, பாராயணம் ஆகியவையும், 23ந் தேதி காலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முன்னிலையில் மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, மகாதீபாராதனை ஆகியவை நடக்கிறது.
இது குறித்து நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் பிரதான சீடர் சுவாமி சர்வேஸ்வரர் கூறியதாவது,
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள வாழும் கலை ஆசிரமத்தில் ஒரே நேரத்தில் 75லிருந்து 80 பேர் வரை தியானம் செய்யலாம். யோகா, பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக 8 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். திருவண்ணாமலையில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எங்களிடம் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பயிற்சியாளர் என்.சக்தி உடனிருந்தார்.
-----------------------------------
No comments