திமுக நிர்வாகிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

திமுக நிர்வாகிக்கு சரமாரியாக அரிவாளால் வெட்டு

திருவண்ணாமலையில் திமுக நிர்வாகியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

திருவண்ணாமலை சின்னகடைத் தெருவில் உள்ள வடவீதி தெருவில் வசிப்பவர் உதயமுத்து(38). திமுக முன்னாள் நகர இளைஞரணி துணை அமைப்பாளர். இவரது மாமா விஜி, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராகவும், ஆவின் பால் மாவட்ட மொத்த விற்பனையாளராகவும்  உள்ளார்.  

உதயமுத்து, இன்று மோட்டார் சைக்கிளில் தன்னுடன் ராஜேஷ் என்பவருடன் வெளியூர் சென்று விட்டு திருவண்ணாமலைக்கு வந்தார். இரவு 7 மணி அளவில் வேங்கிக்கால் பால் குளிரூட்டும் நிலையம் (ஆவின்) அருகே சென்ற போது காரிலும், பைக்கிலும் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை மறித்ததாக சொல்லப்படுகிறது.  

இதைப்பார்த்ததும் ராஜேஷ் பைக்கிலிருந்து குதித்து ஆவின் நிறுவனத்துக்குள் ஓடி தப்பினார். உதயமுத்து மட்டும் வசமாக சிக்கவே அவரை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. 



ரத்தவெள்ளத்தில் சாய்ந்து கிடந்த உதயமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

ஒரு பிரச்சனையில் உதயமுத்துவும், ராஜேஷூம் தலையிட்டு விட்டு வந்த போது மர்ம கும்பல் நோட்டம் விட்டு உதயமுத்துவை வெட்டி சாய்த்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. வந்தர்கள் யார்? கூலி படையா?, எதற்காக வெட்டினார்கள்? என்பது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.