திமுக குடும்ப கட்சிதான். எப்படி? ஸ்டாலின் விளக்கம்
எடப்பாடி பழனிச்சாமி, தலையை நிமிர்த்தி பார்க்காமல், இன்னும் தரையில் தவழ்ந்து கொண்டிருக்கிறார், அவர் பழனிசாமி இல்லை, பொய்சாமி என திருவண்ணாமலை கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை அடுத்த மலம்பாம்பாடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் திமுக சார்பில் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அனைவரையும் வரவேற்றார். திமுக வழக்கறிஞரணி மாநில செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி, மருத்துவரணி மாநில செயலாளர் எழிலன்நாகநாதன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திமுக பொறியாளர் அணி மாநில செயாளர் எஸ்.கே.பி.கருணா, வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்ற வேண்டிய கடமைகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி பாசறை கூட்டத்தின் நிறைவாக மாலை 5 மணிக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என வயிற்றெரிச்சலை வார்த்தைகளாக கொட்டியிருக்கிறார். இந்த ரெண்டரை ஆண்டுகால ஆட்சி செய்துள்ள சாதனைகளை சொல்ல அதற்கு தனியாக இரண்டு மணி நேரம் வேண்டும். அவ்வளவு சாதனைகளை செய்து இருக்கிறோம்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பச்சை பொய்யர் பழனிச்சாமி. அவர் சொன்னது பெரிய பொய். அதிமுக காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான் நாம் ரிப்பன் கட் பண்ணி திறந்திருக்கிறோம் என சொல்லியிருக்கிறார், பொய்சாமி மன்னிக்க வேண்டும் பழனிச்சாமி. திமுக, நிறைவேற்றிய திட்டங்கள் பழனிச்சாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? இன்னும் தரையில்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறாரா? கொஞ்சம் தலையை தான் தூக்கிப் பாருங்களேன், பழனிச்சாமி அவர்களே!
திமுக குடும்ப கட்சி என கூறுகிறார். ஆம் குடும்ப கட்சி தான். அழுத்தம் திருத்தமாக கூறுகிறேன், குடும்ப கட்சி தான். கோடிக்கணக்கான தமிழ் குடும்பங்களை வாழ வைக்கிற கட்சிதான் திமுக. குடும்ப கட்சிதான். பழனிசாமி சம்பந்திக்கும், சம்மந்தியோட சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து ஹை கோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் ஓடிக் கொண்டிருக்கிற உங்களுக்கு குடும்பக் கட்சியை பற்றி பேச என்ன அருகதை, யோக்கியதை உள்ளது?
கடந்த ஐந்து ஆண்டு காலம் நடைபெற்ற தேர்தலில் தோற்றவர் பழனிச்சாமி. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலிலும் முழுமையாக தோற்கடிக்கப்பட உள்ளார். பாஜகவுடன் இருந்தால் டெபாசிட் கிடைக்காது என டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ள தனியாக பிரிந்த மாதிரி உள்ளே வெளியே நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.
சிறுபான்மையினர் மீது திடீரென பாசம் பொங்குகிறது. பாஜகவிற்கு எப்படி எல்லாம் அவர் பல்லக்கு தூக்கினார் என்பது எல்லோருக்கும் தெரியும். குடியுரிமை சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என கேட்டவர் தான் பழனிச்சாமி. இப்படியெல்லாம் ஆணவத்தோடு பேசிவிட்டு கூட்டணி தர்மம் என பேசிவிட்டு இப்போது நாடகத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறார். பாஜகவை விமர்சிக்காமல் பாஜகவுக்கு எதிராக கூட்டணி என மிகப் பெரிய நரித்தனத்தோடு அவர் ஆட்டி வைக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அது அம்பலமாகிவிடும்.
தேர்தல் களம் என்பது போர்க்களம். அந்த போர்க்களம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை போர்க்களங்களை பார்த்தது இந்த திருவண்ணாமலை வட்டாரம். இப்போது இந்திய ஜனநாயகத்தை காக்கக்கூடிய போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த தேர்தல் களத்தில் நாம் காணப்போகிற வெற்றி தான் எதிர்கால இந்தியாவுக்கு மிக மிக முக்கியம்.
இந்த திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் செயல்படுத்தும் போது உலகில் தலை சிறந்த நாடாக இந்தியா உயரும். மக்களை பிளவு படுத்தி அடிமைப்படுத்தக்கூடிய பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் களத்துக்கு இந்த திருவண்ணாமலை பாசறை கூட்டம் நல்ல வழிகாட்டியாக அமையட்டும். தீபம் தெரிவது போல் இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செஞ்சி மஸ்தான், ஆர்.காந்தி, சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், சி.என்.அண்ணாதுரை போன்ற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஸ்டாலின் பேசுவதற்கு முன் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் நன்றியுரையாற்றினார்.
வாக்குசாவடி பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் தந்த தெம்பு
இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது,
இதுவரை 4 மண்டலத்திற்கான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சென்னை மண்டலம்தான் பாக்கி. பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகே வாக்குசாவடி பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. உங்களை நம்பித்தான் நாடும் நமதே, நாப்பதும் நமதே என கம்பீரமாக பேசி வருகிறோம். வாக்காளர்களின் குடும்பத்தில் ஒருவராக மாறி விடுங்கள். அரசின் திட்டங்களை பெற்றுத் தாருங்கள். நீங்கள் வைக்கும் கோரிக்கை, உதவிகளை செய்து தரும்படி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் கூறியிருக்கிறேன்.
திருவண்ணாமலை குறித்து ஸ்டாலின் பேசியது...
இது ஒளி மிகுந்த ஊர். திருவண்ணாமலையையும், தீபத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல் திருவண்ணாமலையையும், திமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது. திமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட 1957ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேர்களில் இம் மாவட்டத்தைச் சேர்ந்த ப.உச, பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை. ஆகிய 3 பேர் வெற்றி பெற்றனர். திமுக முதல் பொதுக்கூட்டத்தை நடத்திய போது 1451 ரூபாய் வசூலானது. இதில் ப.உ.ச 100 ரூபாய் தந்தார். திமுக முதல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது 2 பேர் வெற்றி பெற்றனர். அதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் நின்ற இரா.தருமலிங்கம் வெற்றி பெற்றார். திமுகவிற்கு திருப்பு முனை தந்தது திருவண்ணாமலை. ப.உ.சண்முகத்திற்கும், இரா.தருமலிங்கத்திற்கும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியும் திருவண்ணாமலையிலிருந்துதான் துவக்கப்பட்டது. இதில் திமுக வெற்றி தீபம் பெற்றதற்கு அடித்தளம் அமைத்தது திருவண்ணாமலை தான்.
எ.வ.வேலு தந்த நிதி
ஸ்டாலினுக்கு எ.வ.வேலு வெள்ளி செங்கோலை பரிசளித்தார். பிறகு தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு ரூ.51 லட்சத்தை வழங்கினார். முன்னதாக பேசிய எ.வ.வேலு, ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள் என சாபமிட்டார்.
மணியம்மையை பார்த்து பெரியார்...
திருவண்ணாமலை, திமுகவிற்கு உறுதுணையாக இருந்து வந்ததை பற்றி பேசிய துரைமுருகன், திருவண்ணாமலையில்தான் பெரியார், மணியம்மையை பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டார். அந்த அளவிற்கு விவரமான ஊர் இது என்று குறிப்பிட்டார்.
இதுதான் லன்ச்
பயிற்சி பாசறை கூட்டத்தில் 12 ஆயிரத்து 433 முகவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, முட்டை கிரேவி, வடை, எலும்பு ரசம், பனைவெல்ல மைசூர்பாகு, பாயாசம், தயிர் பச்சடி வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு புளிசாதம் வழங்கப்பட்டது.
அரசியல் விமர்சர்கள் கருத்து...
பாஜகவோடு கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது. இது திமுக ஓட்டு வங்கியை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது தெரியாது. இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவை அதிகம் தாக்குவததை குறைத்து விட்டு பழனிச்சாமியை தாக்கி பேசி வருகிறார். அதனால்தான் பாஜகவோடு பழனிச்சாமி ரகசிய உறவு வைத்திருக்கிறார் என திருவண்ணாமலை கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
No comments