ஜமுனாமரத்தூர்:1569 தனி நபர்களுக்கு வன உரிமை பாத்தியம்

ஜமுனாமரத்தூர்:1569 தனி நபர்களுக்கு வன உரிமை பாத்தியம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவில் 4-வது அதிக எண்ணிக்கையாக 1569 பயனாளிகளுக்கு தனி நபர் வன உரிமை பாத்தியம் அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் பா.முருகேஷ் 89 கிராமங்களுக்கான சமூக வன உரிமை பாத்தியம் மற்றும் 102 நபர்களுக்கு தனிநபர் வன உரிமை பாத்தியம் ஆகியவற்றினை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 

2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் கீழ் வனப்பகுதியில் பாரம்பரியமாக வசித்து வரும் பழங்குடியின பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளுக்கு வனப்பகுதி நிலத்தில் சாகுபடி மேற்கொள்ள தனிநபர் வன உரிமையும், வன பகுதியில் சிறு வனப் பொருட்களான (MFP-Minor Forest Produce) நெல்லி, புளி, கடுக்காய், தேன், பூந்திக்கொட்டை போன்ற பொருட்களை சேகரிப்பதற்கான சமூக வன உரிமையும் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி, 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த ஜமுனாமரத்தூர் வட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் விடுதலின்றி வன உரிமை பாத்தியம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த 2022 ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டின் போது 165 நபர்களுக்கு மட்டும் தனி நபர் வன உரிமை பாத்தியம் அளிக்கப்பட்டிருந்தது. சமூக வன உரிமை பாத்தியம் ஏதும் அளிக்கப்படவில்லை. 

தமிழ்நாடு முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி, 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த ஜமுனாமரத்தூர் வட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் விடுதலின்றி வன உரிமை பாத்தியம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து தீர்வு செய்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

குறிப்பாக வன உரிமை கோரி வரப்பெற்று தள்ளுபடி செய்யப்பட்ட 568 (Partially Vegetated) மனுக்கள் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் திருவண்ணாமலை பழங்குடியினர் நல அலுவலர், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர், ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர், வன அலுவலர்கள், தொடர்புடைய தலைமை நில அளவர், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு மூலம் சீராய்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தனி நபர் வன உரிமை பாத்தியம் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இது வரை மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் 154 கிராமங்களை சார்ந்த வனச் சரக பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடியின பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளிகளுக்கு 49,400 ஹெக்டேர் பரப்பு வன நிலத்திற்கு சமூக வன உரிமை பாத்தியம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 4-வது அதிக எண்ணிக்கையாக 1569 பயனாளிகளுக்கு தனி நபர் வன உரிமை பாத்தியம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனி நபர் மற்றும் சமூக வன உரிமை பாத்தியம் பெற தகுதியானவர்கள் எவரும் விடுபட்டிருந்தால் அவர்களும் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் ம.தனலட்சமி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

                                                   ---------------------------------------------

                                       



Next Post Previous Post

No comments