தீபத்திருவிழாவிற்கு 50 லட்சம் பேர் வருவார்கள்-கலெக்டர்

தீபத்திருவிழாவிற்கு 50 லட்சம் பேர் வருவார்கள்-கலெக்டர்

இந்த ஆண்டு நடைபெற உள்ள கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு 50 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார். 

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற நவம்பர் 14ந் தேதி அன்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்குகிறது. நவம்பர் 17ந் தேதி கொடியேற்றமும், 26ந்தேதி மகாதீபமும் நடைபெறும். 

இதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் இன்று அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசுகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார்த்திகை தீபத்திவிழாவில் 34 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு மகாதீப தரிசனம் செய்து பாதுகாப்பாக சென்றனர். இந்த ஆண்டு வருகிற நவம்பர் 26ந் தேதி பரணிதீபம் மற்றும் மகாதீபம் நடைபெறவுள்ளது. இதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்த அவர் நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி சாலைகளில் பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் தகவல் பலகை தமிழ் ஆங்கிலம் மற்றும் கூடுதலாக பிறமொழிகளிலும் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் பேசும்போது இந்தாண்டு 13 ஆயிரம் போலீசார் கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பெ.ரிஷப், அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இந்து அறநியைத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ஜோதி லட்சுமி, அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார்,  கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார், நகராட்சி ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் நீலேஸ்வரன், தாசில்தார் எஸ்.சரளா திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மெ.பிரித்திவிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் குணசேகரன் உள்பட அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

                                      ------------------------------------------------------

கார்த்திகை தீபத்திருவிழா உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வின் வீடியோக்களை காண சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.




Next Post Previous Post

No comments