அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்பட 5 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற விபத்துக்களில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
காஞ்சிபுரம் சர்வ தீர்த்தக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் அங்குள்ள மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா (35)இ மகள் திலக்ஷனா (6). ரமேஷின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நகனூர் கிராமத்தில் நேற்று கோயில் திருவிழா நடந்தது.
இதில் குடும்பத்துடன் பங்கேற்ற அவர் திருவிழாவை முடிந்ததும் பைக்கில் மனைவி மற்றும் மகளுடன் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள தேத்துறை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச்சென்ற அரசு பேருந்து இவர்களது பைக் மீது மோதியது.
இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே ரமேஷ், திலக்ஷனா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரியா படுகாயமடைந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பிரியாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும் தூசி இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் மற்றும் திலக்ஷனாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா எலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசு(40). இவர் திருப்போரூர் அரசு போக்குவரத்து பணிம னையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இளவரசு தனது மனைவி மீனாட்சி(35), மகள் பிரசாந்தினி (5), மகன் பிரவீன் (4) ஆகியோருடன் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூரில் வசிக்கும் மீனாட்சியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றனர். அங்கு விழா முடிந்தவுடன் நேற்றுமுன்தினம் இரவு எலப்பாக்கம் கிராமத்திற்கு காரில் வீடு திரும்பினர். காரை இளவரசு ஓட்டினார்.
வந்தவாசி-மேல்மருவத்தூர் நெடுஞ்சாலை சாலவேடு முருகன் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட காரை இடதுபுறமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இளவரசு உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். கிராம மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரவீன் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மற்ற 3 பேரையும் உறவினர்கள் மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இளவரசும் உயிரிழந்தார். மீனாட்சி மற்றும் பிரசாந்தினி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments