ரூ.14 ஆயிரம் உதவித் தொகையுடன் தொழிற்பழகுநர் முகாம்
அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், சர்க்கரை ஆலை போன்ற முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திருவண்ணாமலையில் நடக்கிறது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிரதம மந்திரி தேசிய அப்ரண்டிஷ்சிப் மேளா மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் செய்யார் சர்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
என்சிவிடி மற்றும் எஸ்சிவிடி முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் பயிற்சி பெற்று 2023-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 2023-ம் ஆண்டிற்கு முன்னதாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம்.
ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12ம் வகுப்பு கல்வித்தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரண்டிஷ்சிப் சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.
தொழிற்பழகுநர் பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6ஆயிரம் முதல் ரூ.14ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தொழிற்பழகுநர் பயிற்சிக்குப் பின் பொது பயிற்சி வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும். தொழிற்பழகுநர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.
இம்முகாமிற்கு வருகைபுரியும் பயிற்சியாளர்கள் பதிவு செய்து அதன் விவரத்தினை அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------
No comments