பெண்களால் நடத்தப்படும் எண்ணெய் உற்பத்தி நிறுவனம்
திருவண்ணாமலை அருகே எண்ணெய் உற்பத்தி நிறுவனம் முழுவதும் பெண்களால் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், கலசபாக்கம், சேத்பட், தெள்ளார் மற்றும் வந்தவாசி ஆகிய 6 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக கீழ்பென்னாத்தூர் மற்றும் துரிஞ்சாபுரம் வட்டாரங்களில் உள்ள மகளிர் உற்பத்தியாளர்களை கொண்டு குழு உருவாக்கி திருவண்ணாமலை நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற பெயரில் எண்ணெய் பிழியும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சிறுநாத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது 812 பங்குதாரர்கள் உள்ளனர். அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்திற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் அலுவலகம் அமைத்தல் மற்றும் அலுவலக தளவாட பொருட்கள் கொள்முதல் செய்ய முதல் தவணை தொகையாக ரூ.5 லட்சமும், வணிக விரிவாக்கம் செய்தல் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய இரண்டாம் தவணையாக ரூ.10 லட்சம் ஆக மொத்தம் ரூ. 15 லட்சம் தற்போது வரையில் மானியமாக (அரசு உதவித் தொகை) அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல் அலுவலர் எஸ்.தமிழ்மாறன் முன்னிலை வகிக்க திட்ட செயலர் (திறன்மேம்பாடு) சுசிலா அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பூ.அய்யாகண்ணு, அட்மா குழு தலைவர் ஆர்.சிவக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
முடிவில் சிறுநாத்தூர் நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கௌசல்யா நன்றி கூறினார்.
-----------------------------------------------------------------------------------
https://youtube.com/@AgniMurasu
No comments