திராவிட சூரியனே தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி
அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளை யொட்டி திருவண்ணாமலையில் மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் திராவிட சூரியனே என்ற தலைப்பிலும் போட்டி நடக்கிறது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப்போட்டி 08.08.2023 (செவ்வாய்க் கிழமை) அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப்போட்டி 10.08.2023 (வியாழக்கிழமை) அன்றும் திருவண்ணாமலை தியாகி நா. அண்ணாமலைப்பிள்ளை அரசு மேனிலைப் பள்ளியில் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.
கல்லூரி/பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000ம், இரண்டாம் பரிசாக ரூ.3000ம்,, மூன்றாம் பரிசாக ரூ.2000ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பெறவுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்பேச்சுப் போட்டி தலைப்புகள் (பள்ளிகளுக்கு)
அம்பேத்கரின் இளமைப்பருவம், பூனா உடன்படிக்கை, அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி, பௌத்தத்தை நோக்கி, அம்பேத்கரும் காந்தியடிகளும், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு, இந்திய அரசிலமைப்புச் சட்டம், சமூகநீதி என்றால் என்ன, அரசிலமைப்பின் தந்தை, சட்ட மேதை அம்பேத்கர்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்பேச்சுப் போட்டி தலைப்புகள் (கல்லூரிகளுக்கு)
கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய், பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தருமமும், கூட்டாட்சி கோட்பாடும் பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கர் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பௌத்தமும்
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி தலைப்புகள் (பள்ளிகளுக்கு)
கலைத்தாயின் தவப்புதல்வன், முத்தமிழறிஞர், சங்கத்தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி ,தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி தலைப்புகள் (கல்லூரிகளுக்கு)
என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூக நீதிக் காவலர் கலைஞர்,
மேற்காணும் தலைப்புகளிலிருந்து போட்டி நாளன்று சுழற்சி முறையில் தலைப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கல்லூரிக் கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக அனைத்து கல்லூரிகளுக்கும், முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
No comments