விடுதி பராமரிப்பு கட்டணத்தை 5 ஆண்டுகளாக வழங்காமல் இருப்பதா?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலசங்க மாநில செயற்குழு கூட்டத்தில் 5 ஆண்டுகளாக வழங்காமல் இருக்கும் விடுதி பராமரிப்பு கட்டணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஒரு தனியார் விடுதியில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலசங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.திருகுமரன் தலைமை தாங்கினார். மாநில சங்க ஆலோசகர்கள் வி.அண்ணாமலை, ஏ.தேவராஜ், கே.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பூங்கான் அனைவரையும் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர்கள் கோ.கோவிந்தசாமி, வெங்கடேசன், மாநில துணை பொதுச் செயலாளர் கமலநாதன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர்.
இந்த கூட்டத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலிப் பணியிடங்களில் தொகுப்பூதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், ஏற்கனவே பணியாற்றிவரும் தொகுப்பூதிய ஆசியர்களுக்கு ஏப்ரல் 2023 முதல் ஊதியம் வழங்கிட வேண்டும், 2023-24ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நடத்திட வேண்டும், 01.06.2009க்குபின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு கல்வி சார்ந்த தனி இயக்குநர் பணியிடம் உருவாக்க வேண்டும், பணி மூப்பில் உள்ள உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதித்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள விடுதி பராமரிப்பு கட்டணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்திம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பி.மாரிமுத்து நன்றி கூறினார்.
No comments