ஆதிதிராவிடர் பள்ளிகளில் 40 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

ஆதிதிராவிடர் பள்ளிகளில் 40 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 40 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 32 இடைநிலை ஆசிரியர், 8 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. 

இந்த பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு மாத ஊதியம் ரூ.12,000 மற்றும் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி அதன்படி, வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் அ10சிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று,  இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாளராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றிருக்க வேண்டும். 

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சம்மந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்களை மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக நிரப்பப்படும்.

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் (2023-24)  பள்ளி இறுதிதேர்விற்கு முந்தைய மாதம் வரை இவற்றில்  எது முன்னரோ அது வரையில் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பப்படும்.

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமாக விண்ணப்பத்திணை உரிய கல்வி தகுதிச்சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் 05.09.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 


  -------------------------------------------------------------------



Next Post Previous Post

No comments