கலைஞரின் கவிதையை ஒப்புவித்தால் ரூ..25 ஆயிரம்
திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் கலைஞரின் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டி நடக்க உள்ளது. இதில் மாநில அளவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞரின் கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சார்பில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது.
அதையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான கலைஞரின் கவிதைகள், திரைப்பட வசனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 3 பேரை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க பள்ளி நிர்வாகங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் நடை பெறும் போட்டிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பரிசுகள் வழங்க உள்ளார். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். மண்டல அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்இ இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
மண்டல அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
எனவே இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்களின் பெயர்களை மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்கு வரும் 11ம் தேதிக்குள் மாவட்ட திமுக அலுவலகம், திருக்கோயிலூர் சாலை, திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments