நர்சு படிக்கும் பழங்குடியின மாணவியர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு
நர்சு படிக்கும் பழங்குடியின மாணவியர்கள் கட்டண செலவினங்களை பெற தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் 2023-2024–ஆம் கல்வி ஆண்டில் செவிலியர் பட்டயப்படிப்பில் (DIPLOMA IN GENERAL NURSING AND MIDWIFERY COURSE(DGNM) சேர்ந்துள்ள பழங்குடியின மாணவியர்கள், அவர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகள் பயில ஆகும் கல்விக்கட்டணம், புத்தக கட்டணம், விடுதிக்கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் என ஒரு மாணவியருக்கு ரூ.70 ஆயிரத்தை அரசே ஏற்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, அரசு ஆதிதிராவிட பள்ளி மற்றும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் 40 சதவீதம் /அதற்குமேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவியர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
எனவே செவிலியர் பட்டயப்படிப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் பயிற்சி கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ள பழங்குடியின மாணவிகள் மற்றும் கல்வி நிலையங்கள், மாணவிகள் செவிலியர் பயிற்சியில் சேர்ந்த விவரத்தினை திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் தகவல் தெரிவித்து பழங்குடியின மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
No comments