திருவண்ணாமலையில் 868 வீரர்கள் பங்கேற்ற எறிபந்து போட்டி
திருவண்ணாமலையில் 868 வீரர்கள் பங்கேற்ற மாநில அளவிலான எறிபந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை அணியும், பெண்கள் பிரிவில் திருவள்ளூர் அணியும் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச்சென்றன.
இந்த அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழினை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
18-வது தமிழ்நாடு மாநில சப்ஜூனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் கனகாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டங்களாக 2 நாட்களாக நடைபெற்றன.
ஆண்கள் பிரிவில் 32 மாவட்ட அணிகளும், பெண்கள் பிரிவில் 30 மாவட்ட அணிகளும், பங்கேற்றன. இதில் 868 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியை கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பழனி தொடங்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெற்ற லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 4 அணிகளுடன் மோதின. இதில் வெற்றி பெற்ற 8 அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி போட்டியில் விளையாடின. ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை கோவை அணியும், 2-வது இடத்தை தூத்துக்குடி அணியும், 3-வது இடத்தை சென்னை அணியும் பிடித்தது. இதேபோல் பெண்கள் பிரிவில் முதலிடத்தை திருவள்ளூர் அணியும், 2-வது இடத்தை கரூர் அணியும், 3-வது இடத்தை சென்னை அணியும் பிடித்தது.
மேலும் சிறந்த வீரர்களாக பெண்கள் பிரிவில் கரூர் அணியை சேர்ந்த கன்யமித்ராவும், ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி அணியை சேர்ந்த அகிலேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் இருந்து தமிழக அணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய எறிபந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட எறிபந்து சங்க தலைவர் டாக்டர் சாயர் டி.அரவிந்த்குமார் தலைமை தாங்கினார். அகில உலக இந்திய எறிபந்து சங்க பொருளாளர் டி.பாலவிநாயகம் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட எறிபந்து சங்கத் தலைவர் சாய் எம்.தர்ஷன் அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழ்நாடு எறிபந்து சங்க செயலாளர் ராஜா, வழக்கறிஞர் ஆர்.வி.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள், சிறந்த வீரர்களுக்கு விருது ஆகியவற்றை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் மு.பெ.கிரி எம்எல்ஏ, திருவண்ணாலை மாவட்ட எறிபந்து சங்க இணை செயலாளர் ஏ.அருண்குமார், துணைத் தலைவர் எம்.எழிலரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட எறிப்பந்து சங்க செயலாளர் என்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
No comments