வெளுத்து வாங்கிய மழை- மகிழ்ச்சியிலும்,சோகத்திலும் விவசாயிகள்

வெளுத்து வாங்கிய மழை-மகிழ்ச்சியிலும்,சோகத்திலும் விவசாயிகள்

செய்யாறு, கலசப்பாக்கத்தில் வெளுத்து வாங்கிய மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. செய்யாறில் வெள்ளம் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே சமயம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதால் ஒரு பகுதி விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பசும்பொன்நகர் விரிவு பகுதியில் பல்வேறு தெருக்கள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்நகரில் இதுவரை மழைநீர் வடிய கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலைகளில் நீர் வெளியேறாமல் தெருக்களில் தேங்கிக் கிடக்கிறது. 

இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழைக்காரணமாக பசும்பொன் நகர் 2வது தெரு தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இதேபோல் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் இலங்கை அகதிகள் முகாமில் 32 வீடுகள் உள்ளன. 23 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டது. இவற்றில் பெரும்பாலும் மேற்கூரைகள் முற்றிலுமாக பழுதடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் தேங்குவதை வழக்கமாகி வருகிறது.  நேற்றிரவு பெய்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. 

இதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். விடியவிடிய தூங்க முடியாமல் விழித்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே வீடுகளை சீரமைப்பதோடு சுகாதாரம், குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்டவற்றை செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்து வருவதால், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக கலசப்பாக்கம் பகுதியில் 92.60 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும் செய்யாறில் 64 மி.மீ., ஆரணியில் 4.80 மி.மீ., செங்கத்தில் 7.40 மி.மீ., ஜமுனாமரத்தூரில் 20 மி.மீ., வந்தவாசியில் 46 மி.மீ., போளூரில் 33.20 மி.மீ., சேத்துப்பட்டில் 17 மி.மீ., வெம்பாக்கத்தில் 7 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 24.33 மி.மீ., மழை பெய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் பகுதியில் சில தினங்களாக அதிகப்பட்ச மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வறண்டு காணப்பட்ட செய்யாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் அறுவடை நேரத்தில் மழையினால் பயிர்கள் சேதமாகவே விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

Next Post Previous Post

No comments