அழகி போட்டி-தலைமை தாங்கி நடத்தி தர கலெக்டருக்கு அழைப்பு
வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெறும் அழகி போட்டியை தலைமை தாங்கி நடத்தி தரும்படி கலெக்டருக்கு திருநங்கைகள் நேரில் அழைப்பு விடுத்தனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள வேடந்தவாடி கிராமத்தில் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்தை அடுத்து இங்குதான் சித்திரை மாத திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
விழாவை யொட்டி விநாயகர் தேர்¸ கூத்தாண்டவர் தேர்¸ காமாட்சியம்மன் தேர் என 3 தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வரும். அப்போது திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் திருமணச் சடங்கு நடக்கும். மேலும் திருநங்கைகளுக்கான அழகி போட்டி, நடனப் போட்டி ஆகியவையும் நடைபெறும்.
இந்த வருடம் 126 வது ஆண்டாக திருவிழா நடைபெற உள்ளது. இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்சை திருநங்கைகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில் அவர்கள் மே 1ந் தேதி நடைபெற உள்ள மிஸ் வேடந்தவாடி-2023 திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியும், நடனப் போட்டியும் நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி துவக்கி வைக்க வருகை தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இது சம்மந்தமாக பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
No comments