யாக குண்டத்தில் தங்கம்,வெள்ளி நகைகளை போட்டு பூஜை
திருவண்ணாமலையில் அட்சய திருதியை யொட்டி நடைபெற்ற மகாலட்சுமி யாகத்தில் தங்கம்,வெள்ளி நகைகள் போடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அனைத்து செல்வங்களையும் பெற குபேரன் மகாலட்சுமியை பூஜித்த நாள், சிவபெருமானுக்கு அன்னை அன்னபூரணியாக அன்னம் பாலித்த நாள், மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு அக்ஷய பாத்திரம் கிடைத்த நாள் அட்சய திருதியை ஆகும். ஆண்டு தோறும் சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் நாள் வரக் கூடிய நாள் இதுவாகும்.
அட்சய திருதியை முன்னிட்டு மகாலட்சுமி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இதையொட்டி இன்று அட்சய திருதியை முன்னிட்டு திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள ஓயா மடத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலக மக்கள் நன்மை பெறவும், பொருளாதார வீழ்ச்சி ஏற்படாமல் நாடு முன்னேறவும், மக்களுக்கு காரியங்கள் கைகூடி, தனதான்யங்கள் பெற்றிடவும் இந்த யாகம் நடைபெற்றது. யாகத்தை யொட்டி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, 10008 மகாலட்சுமி ஜபம், 1008 தாமரை பூக்களினால் ஹோமம், 108 ஸ்ரீசூக்த பாராயணம் ஆகியவை நடைபெற்றது. பிறகு கூட்டு பிரார்த்தனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து யாக குண்டத்தில் தங்கம், வெள்ளி, தங்க மாங்கல்யம், தங்க தடாங்கம் தங்க நெத்தி சுட்டி, தங்க வளையல்கள், வெள்ளி கொலுசு வகைகள் ,வெள்ளி காசுகள், மோதிரங்கள், பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், அன்னம், பழ வகைகள், மற்றும் ஹோம சௌபாக்கிய திரவியங்கள் போடப்பட்டு பிரம்மாண்டமான பூர்ணாஹுதி நடைபெற்றது.
பிறகு சிவானந்த சிவம் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, மகாலட்சுமி தேவிக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்சுமி கடாட்ஷம் அடங்கிய மங்கல பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments