சிஎஸ்கே-வை தடை செய்ய வேண்டும் என சொல்வது ஏன்?
தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் பா.ம.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ வெங்கடேசன் கோரிக்கை வைக்க அது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
பஞ்சாப் அணி தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. அதே போல் பல அணிகள் உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பளித்த நிலையில் சென்னை அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வான அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் போன்றோர் பிற அணிகளில் விளையாடி வருகின்றனர். தற்போது ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சாய்சுதர்சன் 2 அரை சதங்கள் விளாசி கவனத்தை ஈர்த்துள்ளார். இதே போல் விஜய்சங்கரும் நன்றாக விளையாடி வருகிறார்.
இது சம்மந்தமாக செய்தியாளர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு வருமாறு,
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை தடை செய்ய வேண்டும் என சொல்வது ஏன்?
ஐபிஎல் தொடக்க வருடத்தில் நட்சத்திர வீரர்கள் என சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவாக், யுவராஜ் ஆறு பேர் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் ஆறு பேருமே அவரவர் சொந்த நகரத்து அணியின் தலைவர்களாக களமிறங்கினார்கள்.
சென்னை அணிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் தோனி கிடைத்தார். சென்னை அணியில் பாலாஜி, பத்ரிநாத், பழனி அமர்நாத், அனிருத் ஸ்ரீகாந்த், முரளி விஜய், அஷ்வின் என தொடர்ந்து தமிழக வீரர்கள் இடம் பெற்றனர்.
பின்னர் சீசன் மாற மாற அப்ரஜித், ஜெகதீசன், நிஷாந்த், சாய் கிஷோர், கணபதி விக்னேஷ், அபினவ் முகுந்த் என அணியில் இருந்தாலும் போதிய ஆட்டங்களில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. உள்ளூர் வீரர்களை சர்வதேச வீரர்களுடன் ஆட வைத்து தயார்படுத்த வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் உள்ளூர் வீரர்களுக்கு இடமே இல்லாமல் போனது.
சென்னை அணி ஓய்வுப்பெறும் வயதில் உள்ள உத்தப்பா, ராயுடு, ரகானே போன்ற இந்தியாவின் சர்வதேச வீரர்களை பயன்படுத்துகிறதே தவிர, இளம் உள்ளூர் வீரர்களை தேர்வு செய்யவில்லை.
சென்னையை பிரதானமாகக் கொண்டு தமிழக மக்களின் பணத்தில் லாபம் பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திறமையான தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என்பது தான் பாமகவின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.
சென்னை அணிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய திறமையான வீரர்கள் இல்லாமல் இல்லை. குஜராத்தில் ஆடிவரும் சாய் சுதர்சன் உட்பட பலர் இருக்கிறார்கள். கடந்த 2020, 2021 இரண்டு வருடங்கள் இந்தியாவின் பிரபல டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு தான் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தமிழர் என்று கூப்பாடு போட்டால் போதாது. இதுபோன்று ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும். கிரிக்கெட்டில் கேட்பவர்கள், அனைத்திலும் கேட்பார்கள் என்ற எச்சரிக்கை ஒலி இதன்மூலம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பதிவு: செய்தியாளர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி
No comments