ஓம் நமசிவாயா முழக்கத்துடன் கொளுத்தும் வெயிலில் கிரிவலம்
திருவண்ணாமலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் ஓம் நமசிவாயா என்ற முழக்கத்துடன் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி இன்று காலை 10.04 மணிக்கு தொடங்கி நாளை 6ம்தேதி (வியாழக்கிழமை) காலை 10.44 மணிக்கு நிறைவடைகிறது.
இதனால் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். கொளுத்தும் வெயிலிலும் ஓம் நமசிவாயா முழக்கத்துடன்வெறும் கால்களில் பெண்கள், ஆண்கள் என கிரிவலம் சென்றதை பார்க்க முடிந்தது. மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இரவு லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமியை யொட்டி இன்று அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்றும், நாளையும் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக, அதிகாலை தொடங்கி இரவு வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் தரிசனத்திற்கு 4 மணி நேரம் காத்திருத்திருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே பங்குனி உத்திரத்தையட்டி நேற்று இரவு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பகலில் மூலவருக்கும், இரவு உற்சவருக்கும் என இரு திருமண விழாக்கள் நடந்தது. இப்படி இரு திருமண விழாக்கள் நடைபெறும் ஒரே சிவாலயம் திருவண்ணாமலை ஆகும்.
நள்ளிரவு 12மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும், ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மனும் மாட வீதியில் பவனி வந்தனர். விழாவின் தொடர்ச்சியாக 9ம்தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகைவிடுதல் நிகழ்ச்சியும், குமரகோயிலில் மண்டகபடியும், இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன் சுவாமி வீதியுலா நடைபெறும்.
No comments