256 கடைகளுடன் பூ மற்றும் காய்கறி மார்க்கெட்
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் காந்தி நகரில் 256 கடைகளுடன் பூ மற்றும் காய்கறி மார்க்கெட் அமைக்க அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் காந்தி நகர் பைபாஸ் சாலையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 29 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறிச்சந்தை, பூச்சந்தை மற்றும் பழக்கடைகள் அமைக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை கடலைகடை மூலையில் நகராட்சி தெரு மற்றும் சாலை ஓரங்களில் காய்கறி கடைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் ஜோதி மார்க்கெட் தேரடி வீதியில் பூக்கடைகள் செயல்பட்டு வரும் ஜோதி மார்க்கெட்டும் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அந்த மார்க்கெட் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
திருவிழாக் காலங்களில் அதிக மக்கள் தொகையால் பெரும் இட நெருக்கடியும், மிகுந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
எனவே. இந்நகரின் மையப் பகுதியில் பொது மக்கள் எளிதாக அணுகக்கூடிய இடமாகவும் நகராட்சிக்கு சொந்தமான இடமாகவும் உள்ள காந்தி நகரில் 2.67 ஏக்கர் காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த காய்கறிச்சந்தை, பூச்சந்தை, பழக்கடைகள் ரூ. 29 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது.
இந்த மார்க்கெட்டை கட்ட ஈரோடு ஜிஎம்எஸ் எலிகண்ட் பில்டர்ஸ் என்ற நிறுவனத்திற்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. (திருவண்ணாமலையில் டான்காப் இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியும் இந்த நிறுவனத்திற்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது)
புதிய மார்க்கெட் கட்டும் பணியை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புதியதாக கட்டப்பட உள்ள மார்க்கெட்டில் தரைத்தளத்தில் 128 காய்கறி மற்றும் பழக்கடைகள், முதல் தளத்தில் 128 பூக்கடைகள் அமைய உள்ளது. கழிவறை, சாய்தள வசதி, இருசக்கர வாகன நிறுத்துமிட வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால்வாய் வசதி, சாலை வசதி, உயர்மின் கோபுர வசதி ஆகியற்றுடன் புதிய மார்க்கெட் அமைய உள்ளது.
No comments