மூதாட்டியின் 100வது பிறந்தநாளை கொண்டாடிய கிராமத்தினர்


துர்க்கைநம்மியந்தல் கிராமத்தினர்  மூதாட்டியின் 100வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.


வயதானவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் இக்காலகட்டத்தில் 100 வயதான மூதாட்டியின் பிறந்தநாளை மகன்-மகள்கள், பேரன்- பேத்திகள் கிராமத்தினருடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.


திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட துர்க்கைநம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணு மனைவி வீரம்மாள். இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் இருந்த நிலையில் அதில் ஒரு மகள் இறந்து விட்டார். 14 பேரன்கள், 6 பேத்திகள், 13 கொள்ளு பேரன்கள், 17 கொள்ளுப் பேத்திகள் உள்ளனர்.

இவருக்கு 99 வயது முடிந்து நேற்று 100 வது வயது பிறந்தது. அவரது பிறந்த நாளை விழாவாக கொண்டாட குடும்பத்தினரும், கிராமத்தினரும் முடிவு செய்தனர்.

இதற்காக வீட்டில் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் நடுவில் வீரம்மாள் உட்கார வைக்கப்பட்டு அவரை சுற்றிலும் மகன், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் என 54 பேர் நிற்கவைக்கப்பட்டனர்.
 
பிறகு ஊராட்சி மன்ற தலைவர் சாந்திதிருவேங்கடம் தலைமையில் மேடையின் முன்பு திரண்டு இருந்த ஏராளமான கிராம மக்கள் மத்தியில் வீரம்மாள் தனது 100வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
கிராமத்தினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

100 வயதிலும் நோய், நொடியின்றி உற்சாகமாக காட்சியளிக்கும் வீரம்மாள் இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டும் என கிராம மக்கள் அவரை வாழ்த்தினர்.