10 நாட்களில் 7 முறை தீப்பிடித்து எரிந்த இரும்பு தாது மலை

10 நாட்களில் 7 முறை தீப்பிடித்து எரிந்த இரும்பு தாது மலை

திருவண்ணாமலை இரும்பு தாது உள்ள கவுத்தி மலை இன்று பகல் முதல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்க சமூக ஆர்வலர்களுடன் இணைந்து வனத்துறையினர் போராடி வருகின்றனர். 

திருவண்ணாமலையிலிருந்து காஞ்சி கிராமம் செல்லும் வழியில் உள்ள கவுத்திமலை இரும்பு தாது உள்ள மலையாகும். இப்பகுதியில் 325 ஹெக்டேர் பரப்பளவில் இரும்பு தாது இருப்பதாக கூறப்படுகிறது. ஜிண்டால் நிறுவனம் இந்த மலையில் இரும்பு தாதுவை வெட்டியெடுக்க முயன்ற போது மக்கள் வெகுண்டு எழுந்தனர். இதனால் ஜிண்டால் நிறுவனம் பின்வாங்கியது. மக்கள் போராட்டம் மற்றும் போராட்டம் நடத்திய மக்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் களம் இறங்கியது கவுத்திமலை-வேடியப்பன் மலையை பிரபலப்படுத்தியது. 

இந்த மலைக்கு சமூக விரோதிகள் சிலர் தீ வைப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த 10 நாட்களில் மட்டும் இந்த மலை 7 முறை தீப்பிடித்துள்ளது. ரேகன் போக் இந்தியா தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் தீயை அணைத்து அங்குள்ள மரங்களை காப்பாற்றி வருகின்றனர். 

10 நாட்களில் 7 முறை தீப்பிடித்து எரிந்த இரும்பு தாது மலை

இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் கவுத்திமலையில் மீண்டும் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ 3 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. தீயை அணைக்க ரேகன் போக் இந்தியா தொண்டு நிறுவன ஊழியர்களும், வனத்துறையினரும், கிராம மக்களும் போராடி வருகின்றனர். இந்த தீயினால் ஏராளமான மரம், செடி, கொடிகளும் எரிந்து நாசமாயின. 

மஞ்சம் புல்லுக்காக மலை மீது ஒரு கும்பல் அடிக்கடி தீ வைத்து வந்தது. மஞ்சம் புல்லின் தேவை இப்போது வெகுவாக குறைந்து விட்டதால் விஷமிகள் அடிக்கடி தீவைத்து விடுவதாக கூறப்படுகிறது. மேலும் மது அருந்த செல்லும் கும்பலும் தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 



எனவே இது போன்ற சமூக விரோதிகளை வனத்துறை கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Post Previous Post

No comments