53 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு-அதிகாரிகள் அதிரடி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால் 53 குடிநீர் குழாய்களின் இணைப்புகளை துண்டித்து ஆணையாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவண்ணாமலையில் 31ந் தேதிக்குள் வரிபாக்கிகளை கட்டத் தவறினால் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.
வந்தவாசி நகராட்சியில் சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத்தகை இனங்கள் என ரூ.4 கோடிக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் வரி வசூல் செய்வதில் வந்தவாசி நகராட்சி கடைசி இடத்தில் உள்ளது. எனவே, வேலூர் மண்டல ஆணையாளர் ஆர்.குபேந்திரன் நகராட்சி அலுவலர்களை முடுக் கிவிட்டு வரி வசூலை விரைந்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, வந்தவாசி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பி.சரவணன் வரி வசூலாளர்கள், அலுவலர்கள் என 4 குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் 6 வார்டுகள் வீதம் 24 வார்டுகளில் நிலுவையில் உள்ள சொத்துவரி உள்ளிட்டவைகளை வசூல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதில்,தொடர்ந்து வரி செலுத்தாத நபர்களின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த ஒருவாரத்தில் மட்டும் நகராட்சி முழுவதும் 53 குடிநீர் குழாய் இணைப்புகளை ஆணையாளர் பி.சரவணன் முன்னிலையில் ஊழியர்கள் துண்டித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக நகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வரி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் பி.சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.37.98 கோடி வரி பாக்கி
திருவண்ணாமலை நகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ. 37.98 கோடி வரியை வரும் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையாளர் ரா.முருகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை நகராட்சியில் சொத்து வரியாக ரூ.6.92 கோடி, காலிமனை வரியாக ரூ.2.90 கோடி, தொழில் வரியாக ரூ.1.46 கோடி, குடிநீர் கட்டணமாக ரூ.8.50 கோடி, கடை வாடகை மற்றும் குத்தகையாக ரூ.10.49 கோடி, பொது சுகாதார சேவை வரியாக ரூ.1.73 கோடி, பாதாள சாக்கடை கட்டணமாக ரூ.5.97 கோடி என மொத்தம் ரூ.37.98 கோடி வரி பாக்கியுள்ளது.
வீடு, வீடாக சென்று வரியை வசூல் செய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், ரூ.54.09 கோடி வரி பாக்கியுள்ள நிலையில் 30 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.
ரா.முருகேசன் |
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், தனது சொந்த வரி வருவாய் அடிப்படையில் மட்டுமே நகர மக்கள், வணிகர்கள், பக்தர்கள் உள்ளிட்டவர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சர்வதேச சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலை நகரில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிகர்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட தொகையை நிலுவையின்றி வரும் 31ம் தேதிக்குள் செலுத்தி நகர வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
வரி செலுத்த தவறினால் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments