நாளை சிவராத்திரி, பிரதோஷம் இரட்டைப் புண்ணியத் திருநாள்
நாளை சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். தங்கும் விடுதிகளும் நிரம்பி விட்டன.
சிவராத்திரி நாயகன்
பன்னிரண்டு மாதம் வரும் சிவ ராத்திரிகளில் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாகும். மற்ற மாதம் வருவது மாத சிவராத்திரியாகும். சிவராத்திரி யாரும் நெருங்க முடியாத அடி முடி காண முடியாத பரஞ்சோதிப் பெருமானாகிய லிங்கோற்பவர் திருநாள். அரி அயனுக்கு லிங்கோற்பவர் திருக்காட்சி அருளிய நாளே சிவராத்திரி.
கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் முதல் ஊழிக் காலத்து ஐந்து முக பிரம்மனும், விஷ்ணுவும் வானம், பாதாளம் என அலைந்து திரிந்தும் அடி முடி காண முடியாத இருவரின் செருக்கை நீக்கி சிவபெருமான் இலிங்கோற்பவ மூர்த்தியாய் உருவத் திருமேனியோடு தோன்றினார். கோடிக் கணக்கான ஆண்டுகள் பழைமையான சிவராத்திரி அருட்பெருஞ்சோதி ஆண்டவரான லிங்கோற்பவர் திருநாள். ஆதலால் லிங்கோற்பவரைப் பூஜிக்காமல் சிவராத்திரி பூஜை முழுமை அடையாது.
லிங்கோற்பவர் திருக்காட்சி
நெருப்புத் தூணை ஜோதி லிங்கத்தைத் தொழுது போற்றி வழிபட்ட பிரம்மா, விஷ்ணுக்களுக்குத் திருவண்ணாமலையில் லிங்கோற்பவர் திருக்காட்சி அருளிய நேரம் இரவாகும். ஆதலால் அரி அயன் பூசித்தது போல் போன்று இரவில் லிங்கப் பூசையும் லிங்கோற்பவர் பூசையும் நடக்கின்றன.
பெரும்பாலான சிவாலயங்களில் கருவறையின் பின் பக்கம் வெளிப்புறச் சுவற்றில் லிங்கோற்பவரைக் காணலாம். திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையார் சன்னதி பின்புறம் 12ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட 130 சென்டி மீட்டர் உயரத்திலும், 40 சென்டி மீட்டர் அகலத்திலுமான கருங்கற்களால் வடிவமைக்கப்பட்ட லிங்கோற்பவர் உள்ளது.
திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் பிரகாரத்தில் லிங்கோற்பவர் உள்ளார். மதுரைக்கு அருகே உள்ள திரு ஆப்புடையார் கோயில் எனப்படும் திரு ஆப்பனூர் கோயிலில் லிங்கோற்பவர் வெளிப் பிரகாரத்தில் உள்ளார். ஆதியந்தம் இல்லாத அரும் பெரும் சோதியின் முடி காண்பதற்கு முதலில் அன்னமாகவும் களைப்படைந்த பின்னர் கழுகாகவும் பறந்து சென்ற பிரம்மனது உருவம் மேற்பகுதி பிரம்ம தேவனாகவும் கீழ்ப் பகுதி அன்னப் பறவையாகவும் திரு ஆப்புடையார் கோயிலில் இருப்பது மிக அரிய காட்சியாகும். சென்னை தாம்பரத்திற்கு அருகே உள்ள மாடம் பாக்கம் தேனுபுரீசுவரர் ஆலயத் தூணிலும் இந்த அரிய காட்சியைக் காணலாம். மதுரை சுந்தரேசர் திருக்கோயில் சொக்க லிங்கப் பிரகாரத்தில் லிங்கோற்பவர் தனிச் சந்நிதியில் உள்ளார்.
சனி பிரதோஷம்
இந்த வருடம் நாளை வருவது அதி அற்புதமான மகா சிவராத்திரி. பிரம்ம விஷ்ணுக்களுக்கு சிவராத்திரி நாயகன் ஓணகாந்தன் லிங்கோற்பவர் அடி முடி மறைத்துத் திருக் காட்சி அருளிய, திருவோண நட்சத்திரமும், பிரதோஷ நாயகன் சந்தியா தாண்டவர் ஆலகால நஞ்சை அமிர்தம் ஆக்கிய சனிக் கிழமையுடன் மகா பிரதோஷமும் கூடி வரும் திரு நாள்.
சிவராத்திரியோடு சனிப்பிரதோஷமும் இணைந்து வருவதால் அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன. பெரும்பாலான தங்கும் விடுதிகளில் அறைகள் சனி, ஞாயிறு என 2 நாட்களுக்கும் சேர்த்து புக்காகி உள்ளது.
அதே நேரம் ஈசான்யத்தில் அண்ணாமலையார் கோயிலின் தங்கும் விடுதியில் ஞாயிறு மட்டும் அறைகள் காலியாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இங்கு அறைகள் புக் செய்ய தொடர்பு எண்கள்:-
செல்- 7358100396, போன்- 04175 299118
No comments