வீட்டின் உரிமையாளரை கொலை செய்து உடல் எரிப்பு
திருவண்ணாமலையில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்து உடலை காட்டுக்கு எடுத்துச் சென்று எரித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள கன்னமடை காட்டில் பாதி உடல் சாம்பலான நிலையிலும், மற்ற பகுதிகள் கருகிய நிலையிலும் பெண்ணின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார், கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். எரிக்கப்பட்டு பிணமாக கிடந்தவர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
சடலமாக கிடந்தவர் திருவண்ணாமலை பேகோபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலத்தின் மனைவி விஜயா (வயது 65) என்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் குடியிருந்து வரும் காஞ்சனா(38) என்பவர் விஜயாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. பிறகு காஞ்சனாவும், அதே தெருவில் வசித்து வரும் ஞானவேல்(38) என்பவரும் சேர்ந்து விஜயாவின் உடலை எடுத்துச் சென்று கன்னமடை காட்டில் எரித்ததும் தெரிய வந்தது.
காஞ்சனா |
ஞானவேல் |
இதையடுத்து தச்சம்பட்டு போலீசார், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி காஞ்சனாவையும், ஞானவேலையும் கைது செய்தனர்.
காஞ்சனாவுக்கும், ஞானவேலுவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஞானவேலு, காஞ்சாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். இதை விஜயா கண்டித்தாராம். இதனால் விஜயா மீது இருவரும் ஆத்திரத்தில் இருந்தனர். மேலும் ஆதரவற்ற விஜயாவின் சொத்தை அபகரிக்கவும் திட்டம் தீட்டி இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் இருவரும் இருந்த போது ஏன் இப்படி செய்கிறீர்கள்? வீட்டின் வாடகையை தராமல் ஏமாற்றலாமா? என ஆத்திரத்துடன் விஜயா கேட்ட போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் விஜயாவை கொலை செய்தாக கூறப்படுகிறது.
அதன்பிறகு கொலையை மறைக்கும் நோக்கில் காஞ்சனா, ஞானவேலின் உதவியுடன் ஆட்டோவில் உடலை கன்னமடை காட்டுக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைதான காஞ்சனாவும், ஞானவேலுவும் திருவண்ணாமலை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி காஞ்சனாவை வேலூர் பெண்கள் சிறையிலும், ஞானவேலை வேலூர் மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
No comments