ஒரு ஊராட்சியில் இவ்வளவு மனுக்களா? கலெக்டர் ஆச்சரியம்

ஒரு ஊராட்சியில் இவ்வளவு மனுக்களா? கலெக்டர் ஆச்சரியம்


ஆத்திப்பாடி ஊராட்சியில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் முருகேஷ் பங்கேற்றார். இந்த முகாமில் 661 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 324 பேருக்கு எஸ்.டி சான்று வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆத்திப்பாடி மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு மனுநீதி நாள் முகாம் இன்று காலை நடைபெற்றது. 

அடிப்படை வசதி கேட்டு மனு

முகாமில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்தோம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை நினைக்க கூடாது. அனைத்து மனுக்களுமே நியாயமாக, சட்டத்திற்கு உட்பட்டு இருந்தால் உடனடியாக அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் 80 சதவீதம் அடிப்படை வசதிகள் கோரி தான் வருகிறது. பெரிய அளவில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வரவில்லை. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அதனை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது தான் எங்களின் கடமை. அடிப்படை வசதி கோரி வரும் மனுக்கள் மீது உடனடியாக  நடவடிக்கை எடுத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார். 

324 பேருக்கு எஸ்.டி சான்று

முகாமையொட்டி மொத்தம் 661 மனுக்கள் பெறப்பட்டதில் 581 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 36 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 44 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.


ஒரு ஊராட்சியில் இவ்வளவு மனுக்களா? கலெக்டர் ஆச்சரியம்


கால்நடை காப்பீட்டு அட்டை, சிறுவிவசாயி சான்று, தார்பாய்கள், தையல் இயந்திரங்கள், பட்டா மாறுதல், பண்ணைக் கருவிகள், புதிய குடும்ப அட்டைகள், மாற்றுதிறனாளி மற்றும் முதியோர்,  விதவை உதவித்தொகை, வீட்டுமனை பட்டா என மொத்தம் 581 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 13ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார். இதில் 324 பயனாளிகளுக்கு மலையாளி சாதி சான்றுகளும் அடங்கும். 

இந்த முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஷ்மி ராணி, துணை ஆட்சியர் (பயிற்சி) கலைவாணி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் வெங்கடேசன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் அரகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், ஆணையாளர் மகாதேவன், ஆத்திபாடி ஊராட்சி மன்ற தலைவர் குப்பாயி ஆறுமுகம், மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் ஆச்சரியம் 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் 12 வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களே 500, 600ஐ தாண்டாதபோது ஒரு ஊராட்சியில் மட்டும் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது கலெக்டரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

இது குறித்து ஆத்திப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் குப்பாயி ஆறுமுகத்திடம் கேட்ட போது மனுநீதி நாளில் மேல்முத்தானூர், புதூர் செக்கடி போன்ற பக்கத்து ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களும் மனுக்களை அளித்து நலத்திட்ட உதவிகளை பெற்றனர். ஆத்திப்பாடியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் மலைவாழ் மக்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு முக்கியமாக சாதி சான்றிதழ் கிடைப்பதில் பிரச்சனை இருக்கிறது. மேலும் வீட்டுமனைப்பட்டாவும், முதியோர் உதவித் தொகையும் கேட்டு உள்ளனர். இன்று நடைபெற்ற முகாமில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சாதி சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 

Next Post Previous Post

No comments